தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை சுகாதார வட்டத்திற்குட்பட்ட மாப்பிள்ளையூரணி அரசுஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் ‘மக்களைத்தேடி மருத்துவம்” திட்டத்தின் 4ம் ஆண்டு துவக்க விழா ஆட்சியர்லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசுகயைில் “தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி, அவர்களின் இல்லங்களுக்கே நேரடியாக சென்று தொற்றா நோய்களான உயர் இரத்தஅழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து, மருந்துகள் வழங்கக்கூடிய ‘மக்களைத் தேடிமருத்துவம்”திட்டம் என்ற உன்னதத்திட்டம் முதலமைச்சரால் 2021 ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்குத் தேவையான பிசியோதெரபி மற்றும் வலிநிவாரணம், ஆதரவுசிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. ‘மக்களைத் தேடிமருத்துவம்” திட்டத்தின் கீழ், தொற்றாநோய்களின் சுமையை எதிர்கொள்ளும் விதமாக நோயாளிகளின் இல்லங்களுக்கே நேரில் சென்று சில அத்தியாவசியமான சுகாதாரச் சேவைகள் வழங்கப்படுகிறது.
நோய்களை இருவகைகள் உண்டு தொற்றக்கூடிய நோய், தொற்றாநோய். தொற்றக்கூடிய நோய்கள் கொசு மற்றும் கண்ணுக்கு தெரியாத கிருமிகளால் பரவக்கூடிய அதாவது டெங்கு, மலேரியா மற்றும் சுகாதாரமற்ற தண்ணீரை அருந்துவதால் வரக்கூடிய நோய்கள். இதற்கு அறிகுறி காய்ச்சல். தொற்றா நோய்களில் நீரிழிவுநோய், உயர் இரத்த அழுத்தம் இந்த இரு நோய்களும் மனித உடல்களில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
இந்த நோய்களுக்கு அறிகுறிகள் எதுவும் இருக்காது. இந்த நோய்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும்யென்ற உயர்ந்த நோக்கில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. எதனால் இத்திட்டம் பொதுமக்களுக்கு பயனுள்ளதிட்டம் என்று கூறப்படுகிறது என்றால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும், அவர்களுக்கு தேவையான மருந்துகளை வழங்குவதற்கும் நோய்களின் தன்மைகளை கண்டறிந்து உரியசிகிச்சை அளிக்க அவர்களின் வீடுகளுக்கே சென்று பரிசோதனை செய்வதாலும் இத்திட்டம் முக்கியமான திட்டமாக உள்ளது.
இதேபோல் அனைத்து திங்கட்கிழமைகளிலும் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக வருகை தரும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில்; ஆட்சியர் வளாகத்தில் ‘மக்களைத் தேடிமருத்துவம்” திட்டத்தின் கீழ், இலவச மருத்துவ பரிசோதனை செய்யும் முகாம் நடைபெறுகிறது. மேலும், நகர்ப்புற பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி தூத்துக்குடி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 25 இடங்களில் நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியிலும் இலவச மருத்துவமுகாம் நடத்தப்பட்டது.
அதுபோன்று ஊரகப் பகுதிகளிக்கான மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியிலும் இலவச மருத்துவமுகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தைத் தேர்வு செய்து அந்த கிராமத்தில் உள்ள பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் மக்கள் தொடர்பு முகாமிலும் இந்த மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இது போன்ற முகாம்கள் நடத்துவதற்கான நோக்கம் பொதுமக்கள் உடல் நலத்தினை பேணிகாப்பதற்காகவும் நோய்களின் தன்மை அறிவதற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் கீழ் பல்வேறு திட்டங்கள் இருந்தாலும் மிகக் முக்கியமான திட்டம் இந்த மக்களைத் தேடிமருத்துவம் திட்டம். ஏனென்றால் வீட்டிற்கே சென்று அவர்களுக்குதேவையானமருத்துவ உதவிகளைசெய்வதே இதன் நோக்கம். எனவே பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருந்து தங்களின் உடல் நலத்தைபேணிகாத்துக் கொள்ளவேண்டும் என்றார்.
அதனைத் தொடர்ந்து, ஆட்சியர் லட்சுமிபதி மாப்பிள்ளையூணி அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, வருகைப் பதிவேடு, புறநோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மருந்து பொருட்களின் இருப்பு குறித்து மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறிந்தார்கள்.
முன்னதாக, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சிறப்பாக பணிபுரிந்த 2 இடைநிலை சுகாதாரப் பணியாளர்களுக்கும், 2 தொற்றாநோய் பிரிவு செவிலியர்களுக்கும், 2 பெண் சுகாதார தன்னார்வலர்களுக்கும் மற்றும் 1 மருத்துவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினார்கள்.
மேலும், மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்பசுகாதார நிலைய சிறந்த மருத்துவர் என்று தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற மேகலின் களிஸ்டா மற்றும் இந்தியாவிலேயே முதல் முறையாக என்ஏபிஎல் தரச்சான்று பெற்ற ஆய்வக நுட்பணர் நாராயணன் ஆகியோர் ஆட்சியர் லட்சுமிபதியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். பின்னர்,மாப்பிள்ளையூணி அரசுஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டினார்கள். ‘மக்களைத் தேடிமருத்துவ” திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 2024 வரை 5,15,737நோயாளிகள் சிகிச்சைப் பெற்று பயனடைந்துள்ளனர்.
நிகழ்ச்சியில், துணை இயக்குநர் பொற்செல்வன், புதுக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் ஹேமலதா, மருத்துவ அலுவலர் கார்த்திக், மாப்பிள்ளையூரணி ஊராட்சிமன்றத் தலைவர் சரவணக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் வில்சன், பிரதீப்குமார், முகமது ஆசீக், ராஜலெட்சுமி, மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.