மதுரை, ஜூலை 04 –
சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனை முன்னணி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், மதுரை லில்லி மிஷன் மருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சை நிபுணரின் ஆதரவுடன் 13 மணி நேரம் உயிருள்ள நபர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து 40 வயது மதுரை நோயாளின் உயிரைக் காப்பாற்றினர். கடுமையான மஞ்சள் காமாலை, வயிறு வீக்கம், உடல் சோர்வு உணவுக் குழாயிலிருந்து ரத்தப்போக்கு மற்றும் படிப்படியான கல்லீரல் செயலிழப்பால் அவர் அவதிப்பட்டு வந்தார். இப்போது அவர் சீராக குணமடைந்து அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய 14 நாட்களுக்குள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த சிக்கலான அறுவை சிகிச்சை குறித்து டாக்டர் எஸ். தியாகராஜன் மற்றும் டாக்டர் ஏ.சி. அருண் ஆகியோர் கருத்து தெரிவிக்கையில் “ஹெபடைடிஸ் பி மற்றும் சி போன்ற நாள்பட்ட வைரஸ் தொற்றுகள், மது அருந்துதல், உடல் பருமன் மற்றும் கொழுப்பு கல்லீரல் நோய் ஆகியவை கல்லீரல் செயலிழப்புக்கு முக்கிய காரணங்களாகும். சரியான நேரத்தில் நோய் கண்டறிதல் மற்றும் லேப்ராஸ்கோபிக் மற்றும் ரோபோடிக் கல்லீரல் அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட நவீன அறுவை சிகிச்சை நுட்பங்களை மேற்கொள்வதன் மூலம் சிக்கலான அறுவை சிகிச்சையையும் வெற்றிகரமாக மேற்கொள்ள முடிகிறது. மதுரை பகுதி நோயாளிகளுக்கு எங்கள் கல்லீரல் மாற்று திட்டத்தில் 100 சதவீதம் வெற்றியை அடைந்துள்ளோம். தமிழக அரசின் முதலமைச்சர் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை முழுமையாக கட்டணம் இன்றி அனைவரும் மேற்கொள்ளலாம்” என்றார்.
மேலும் பயன்பெற்ற நோயாளி தெரிவிக்கையில், “நான் கிட்டத்தட்ட நம்பிக்கையை இழந்துவிட்டேன் இந்த நிலையில் எம்.ஜி.எம் மருத்துவமனையில் மருத்துவ குழுவை சந்தித்தபோது எல்லாவற்றையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. மிக முக்கியமான கட்டத்தில் என் மனைவி வந்து என்னைக் காப்பாற்றினார். அந்த தருணம் என் வாழ்க்கையை மாற்றியது. நான் இப்போது சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு திரும்பிவிட்டேன். இது ஒரு புதிய ஆரம்பம் போல் உணர்கிறேன்” என்று கூறினார்.
அப்போது அவரது உறவினர்கள் மற்றும் இதே போல் குணமடைந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த குடும்பத்தாரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.