தருமபுரி மாவட்டத்தில் 3,46,600 பசு மற்றும் எருமைகள் உள்ளன. இவற்றில் 4 மாத வயதிற்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 6-வது சுற்று கோமாரி நோய் தடுப்பு ஊசி செலுத்தும் பணி மேற்கொள்ள மொத்தம் 3 லட்சத்து 56 ஆயிரம் டோஸ்கள் கோமாரி நோய் தடுப்பூசி மருந்துகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி முகாம் மூலம் அனைத்து கால்நடைகளுக்கும் மருந்துகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி முகாமை தருமபுரி மாவட்டம், பாளையம்புதூரில் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வருகின்ற 5- தேதி வரை 3 வார காலத்திற்கு சிறப்பு முகாம்கள் மூலமாக கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. இந்த முகாமில் விடு படும் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி 6-ந் தேதி முதல் 15-ந்தேதி வரை மேற்கொள்ளப்படும். கால்நடை வளர்ப்போர் 100 சதவீதம் தங்களுடைய கால்நடைகளுக்கு இலவசமாக கோமாரி தடுப்பூசி போட்டு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாந்தி கூறினார். இதனைத் தொடர்ந்து முகாமில் 384 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி போடப்பட்டது.
மேலும் 50 விவசாயிகளுக்கு தாது உப்பு கலவையினை கலெக்டர் வழங்கினார் .இந்த முகாமில் முன்னாள் எம்.எல்.ஏ .தடங்கம் சுப்பிரமணி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராம கிருஷ்ணன், உதவி இயக்குனர் ரமேஷ், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் ரவிச்சந்திரன், கால்நடை ஆராய்ச்சி மைய தலைவர் கண்ணதாசன், ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.