நாகர்கோவில் அக் 27
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்திற்குட்பட்ட கால்நடை உயிரினங்கள் குறித்த கணக்கெடுப்பு பணியினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்து தெரிவிக்கையில்-
இந்தியாவில் கால்நடை கணக்கெடுப்பு 5 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. இதுவரை 20 கால்நடை கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. கடைசியாக 2019-ல் 20வது கால்நடை கணக்கெடுப்பு நடைபெற்றது. 21வது கால்நடை கணக்கெடுப்பு 25.10.2024 முதல் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணி கால்நடை பராமரிப்புத்துறையால் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணியினை மேற்கொள்ள மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு அதிகாரியின் கீழ் 42 மேற்பார்வையாளர்கள் மற்றும் 190 கணக்கெடுப்பாளர்கள் இப்பணியினை மேற்கொள்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் நேர்முக பயிற்சி மற்றும் களப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
நமது மாவட்டத்தில் 95 கிராமப்புற வருவாய் கிராமங்கள். 93 நகர்புற வருவாய் கிராமங்கள் மொத்தம் 188 வருவாய் கிராமங்களில் இப்பணி மேற்கொள்ளபடவுள்ளது. இதில் கிராமப்புறத்தில் 1.90.623 குடியிருப்புகள், நகர்புறத்தில் 3,93.832 குடியிருப்புகள். ஆக மொத்தம் 5.84.455 குடியிருப்பு பகுதிகள் அடங்கும்.
இக்கணக்கெடுப்பு வருவாய் கிராம வாரியாகவும் நகர்பகுதியில் வார்டு வாரியாகவும் நடைபெறவுள்ளது. இப்பணியின் மூலம் கிராமப்பகுதி மற்றும் நகரப்பகுதியில் வளர்க்கப்பட்டு வரும் 16 வகையான கால்நடைகளின் இனம் வயது. பாலினம் மற்றும் எண்ணிக்கை போன்ற விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. கால்நடைகளின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கெடுத்தால் மட்டுமே கால்நடை பராமரிப்புக்காக எதிர்கால திட்டங்களை தீட்டுதல், செயல்படுத்துதல், கண்காணித்தல் போன்ற பணிகளை சிறப்பாக செய்யமுடியும், கால்நடைகளுக்கு எதிர்காலந்தில் தேவைப்படும் தீவணம், கால்நடை நோய் தடுப்பூசி. கால்நடை மருத்து உற்பத்தி போன்றவற்றை தட்டுப்பாடு இல்லாமல் உற்பத்தி செய்ய கால்நடைகளின் எண்ணிக்கை முக்கியமானது. வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கால்நடைகளிலிருந்து பெறப்படும் உணவுப் பொருட்களான பால் தயிர், வெண்ணெய். நெய். இறைச்சி, முட்டை போன்றவற்றை தட்டுப்பாடின்றி உற்பத்தி செய்ய இக்கால்நடை கணக்கெடுப்பு இன்றியமையாதது.
இன்றைய காலக்கட்டத்தில் பல்வேறுவித நோய்கள் விலங்குகளிலிருத்து மனிதர்களுக்கு பரவுகிறது. குறிப்பாக தொற்று நோய்களான ரேபிஸ்” எனப்படும் வெறிநோய், “புருசில்லோசிஸ் எனப்படும் கருச்சிதைவு நோய் லெட்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் போன்ற 100 மேற்பட்ட நோய்களை தடுக்கவும். கட்டுப்படுத்தவும் கால்நடைகளின் எண்ணிக்கையினை அறிவது அவசியமாகும்
இயற்கை சீற்றங்களான புயல், மழை, வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் கால்நடைகளில் நிகழும் உயிரிழப்பின் போது உரிமையாளருக்கு உரிய நிவாரணம் வழங்கவும் இக்கணக்கெடுப்பு பணி முக்கியமானது. மேலும் கால்நடைகளுக்கான கொட்டகை வசதி. காப்பீடு வசதி, தீவனம் உற்பத்தி போன்றவற்றை முறையாக திட்டமிடவும் கால்நடை எண்ணிக்கை முக்கியமானது. இக்கால்நடை கணக்கெடுப்பு பணி அனைத்து கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் கால்நடைகளை வளர்க்கும் மற்றும் அவைகள் இல்லாத அனைத்து வீடுகள், நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பண்ணைகள். வழிபாட்டு தலங்கள். விலகுகள் நல மையங்கள் மற்றும் பசுமடங்கள் ஆகிய இடங்களில் விவரங்கள் சேகரிக்கப்படவுள்ளது.
கால்நடை வைத்துள்ளோரின் பெயர் மற்றும் முகவரி, ஆதார், தொலைபேசி எண். முக்கிய தொழில், நிலத்தின் அளவு. கால்நடைகளின் எண்ணிக்கை இனம், வயது. பாலினம் போன்ற விவரங்களும் சேகரிக்கப்படவுள்ளது. எனவே, இது சம்பந்தமான கணக்கெடுப்பு பணியினை உங்கள் பகுதிக்கு மேற்கொள்ள வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு போதிய ஒத்துழைப்பு நல்கி உரிய விவரங்களை அளித்து கால்நடை கணக்கெடுப்பு பணி துல்லியமாக நடைபெறவும். அதன் மூலம் வருங்காலத்தில் கால்நடைகளின் வளம் மற்றும் நலமுடன் மனிதர்களுக்கான உணவு பாதுகாப்பு குறித்து திட்டமிடவும் நமது மாவட்டத்திலுள்ள ஒவ்வொருவரும் தேவையான தரவுகளை கால்நடை கணக்கெடுப்பாளர்கள் வரும்பொழுது அளித்திட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.இராதா கிருஷ்ணன், கால்நடை மருத்துவர்கள், அலுவலர்கள் உட்பட பலர் உள்ளார்கள்.