கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மாவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி (32). விவசாயியான இவர் இரண்டு பசு மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் 10.11.2024 ஞாயிற்றுகிழமை அன்று வீட்டிற்கு வந்த இருவர், மாடு விற்பதாக அறிந்து வந்துள்ளதாக தெரிவித்து, மாடுகளை விலை பேசியுள்ளனர். மிகக்குறைந்த விலைக்கு மாடுகளை கேட்டதால், மாடுகளை தர முடியாது என லட்சுமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 11.11.2024 திங்கட்கிழமை அன்று காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் அருகே கட்டப்பட்டிருந்த இரண்டு மாடுளை காணாமல் போணதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இரவோடு இரவாக அடையாளம் தெரியாத நபர்கள் மாடுகளை திருடியது தெரிய வந்தது. மாடுகளை வாங்க வந்த இரு வியாபாரிகள் மேல் சந்தேகமடைந்த லட்சுமி, மாடுகள் காணாமல் போனது குறித்து போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சந்தேகத்தின் பேரில் இருவரது அடையாளத்தையும் காவல் நிலையத்தில் கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் நாகலட்சுமி, மாவத்தூர் கூட்ரோடு அருகே டாடா ஏஸ் வாகனத்தல் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருவர் செல்வது குறித்து விசாரித்தபோது, முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளனர். பின்னர் அவர்களை பிடித்து விசாரித்தபோது, மாடுகளை திருடிய நபர்கள் என தெரிய வந்தது. இதனையடுத்து சாவடியூர் கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன் (32) மற்றும் பெருமாள் (30) குரும்பேரி கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (29) ஆகிய மூவரையும் கைது செய்தனர். மாடுகளை திருடுவதற்காக பயன்படுத்திய டாடா ஏஸ் வாகனம் மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். லட்சுமியிடமிருந்து திருடப்பட்ட இரு மாடுகளை பறிமுதல் செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
இந்த மூன்று பேரை பிடித்து தொடர் விசாரனை மேற்கொண்டதில் ஊத்தங்கரை அருகே உள்ள பூசாரி கொட்டாயய் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (37) மற்றும் பேருஹள்ளி கிராமத்தை சேர்ந்த திருப்பதி (33) ஆகியோரும் கூட்டாளிகள் என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரையும் சாமல்பட்டி போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு டாடா ஏஸ் வாகனம் மற்றும் திருடப்பட்ட மூன்று மாடுகளை பறிமுதல் செய்தனர். இவர் ஐந்து பேரும் களர்பதி கிராமத்தில் உள்ள செங்கல் சூலையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இரவு நேரங்களில் மாடுகளை திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர் மாடுகள் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பல் பிடிபட்டதும் போச்சம்பள்ளி சுற்று வட்டார விவசாயிகள் பெரும் நிம்மதியடைந்தனர்.