நாகர்கோவில் ஆக 17
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி, தோவாளை தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட
தாழக்குடி பேரூராட்சிக்குட்பட்ட விளாங்காடு காலனி மற்றும் சந்தைவிளை பகுதிகளில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தலா ரூ. 20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளை முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் திறந்து வைத்தார். இதற்கான விழா சந்தைவிளை பள்ளிக்கூடம் அருகே நடைபெற்றது. இவ்விழாவிற்கு தாழக்குடி பேரூராட்சித் தலைவர் சிவகுமார் தலைமை வகித்து பேசும் போது தெரிவித்ததாவது:-
தாழக்குடி பேரூராட்சியை பொறுத்தமட்டில் மக்களின் நலன் கருதி பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். குறிப்பாக மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோதும், அமைச்சராக இருந்தபோதும், தாழக்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடி தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக் கூடாது என்பதற்காக சீதப்பால், சந்தைவிளை, தாழக்குடி, வீரநாராயணமங்கலம் போன்ற பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. இதன் வாயிலாக பொதுமக்கள் பெரிதும் பயன் அடைந்தார்கள். தற்போது அமைக்கப்பட்டுள்ள புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக வருகின்ற தண்ணீரை சந்தைவிளை பகுதியில் உள்ள பார்வதிபுதூர், அனந்தபத்மநாபபுரம், கனகமூலம் புதுகுடியிருப்பு மக்களும், விளாங்காடு காலனிக்குட்பட்ட மீனமங்கலம், மேலக்காலனி, விளாங்காடு காலனி, புதுக்காலனி பகுதி மக்களும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முதலாவதாக தாழக்குடி பழையாற்றிலிருந்து வீரநாராயணமங்கலம் வழியாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தாழக்குடி பேரூராட்சிக்கு வழங்கப்பட்டது. மக்களின் கோரிக்கைகள், பிரச்சினைகள் மீது உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.
தற்போது கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவுடன் முதலாவதாக இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் அவர்களின் நலனுக்காக நெல் கொள்முதல் நிலையம் தாழக்குடியில் அமைத்து கொடுத்துள்ளேன். இதன் வாயிலாக சுற்றுவட்டார கிராம மக்களும், விவசாயிகளும் பயனடைந்து வருகிறார்கள். மேலும் தாழக்குடி பேரூராட்சி பகுதிகளில் மின்வெட்டு ஏற்படாத வகையில் மின்சார வசதிகளை நிறைவேற்றி கொடுத்துள்ளேன். அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் சுற்றுச்சுவர் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி கல்வி மற்றும் அடிப்படை தேவையான குடிதண்ணீர் வசதிகளை நிறைவேற்றுவதில் முன்னுரிமை அளித்து நிறைவேற்றி கொடுக்கப்பட்டுள்ளது. உங்களின் நலனுக்காக தொடர்ந்து உழைத்து கொண்டிருப்பேன். மக்களின் முன்னேற்றமே எனது முன்னேற்றம் என அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவரும், தாழக்குடி பேரூர் கழகச் செயலாளருமான பிரம்மநாயகம், தாழக்குடி பேரூராட்சி துணைத் தலைவர் எஸ்.என்.ராஜா, தோவாளை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சாந்தினி பகவதியப்பன், ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவர் முத்துக்குமார், கழக விவசாய அணி துணைச் செயலாளர் தாணுபிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். பேரூராட்சி கவுன்சிலர் ராஜ்குமார் வாழ்த்துரை வழங்கினார். தாழக்குடி பேரூராட்சி உறுப்பினர் ஜெயந்தி நன்றி கூறினார். விழாவில் தோவாளை ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ஷேக், ஒன்றிய கவுன்சிலர் மகராஜபிள்ளை, இறச்சகுளம் ஊராட்சி துணைத் தலைவர் மனோ, தாழக்குடி பேரூராட்சி கவுன்சிலர்கள் ரோகிணி அய்யப்பன், ராஜ்குமார், சுயம்புகேசவன், அழகம்மாள், பாக்கியம், விளாங்காடு கிளை கழகச் செயலாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.