நாகர்கோவில் பிப் 21
ஆன்லைனில் மோசடியாக செய்யப்பட்ட விளம்பரத்தை பார்த்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய சமையல் எரிவாயு விற்பனை நிலையம் அமைப்பதற்காக விண்ணப்பம் செய்திருந்தார். அதன்படி இணையதள மோசடிக்காரர்கள் பல்வேறு தவணைகளில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடமிருந்து சுமார் 50 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு எந்த ஒரு விற்பனை நிலையமும் அமைத்து தராமல் மோசடி செய்தனர்.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைமிற்கு புகார் அளித்திருந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ஸ்டாலின் உடனடியாக குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய உத்தரவிட்டிருந்தார்.
அவரின் உத்தரவின்படி, வழக்கு விசாரணையில் சைபர் குற்றவாளிகள் டெல்லியில் இருந்துகொண்டு ஏமாற்றியது தெரிய வந்தது. சைபர் கிரைம் ஆய்வாளர் சொர்ணராணி, உதவி ஆய்வாளர்கள் அஜ்மல் ஜெனிப், பெர்லின் பிரகாஷ் தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் டெல்லி சென்று ஹரியானா பரிதாபாத்தை சேர்ந்த வினோத் குப்தா என்பவரின் மகன் சுதிர் குப்தா(32) மற்றும் டெல்லியை சேர்ந்த சுரேந்தர் குமார் அகர்வால் என்பவரின் மகன் அன்குஷ் அகர்வால்(36) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் குற்றவாளிகளிடமிருந்து 8 செல்போன், 1 லேப்டாப், 14 சிம் கார்டு, 7 ATM கார்டு, 2 வங்கி கணக்கு புத்தகம் மற்றும் 5,50,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த சைபர் கிரைம் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.