நாகர்கோவில், ஜூலை 18 –
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ( டிட்டோ-ஜாக்) குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நேற்று 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் சிவகாசன், சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உயர்மட்ட குழு உறுப்பினர் தியாகராஜன் உட்பட நிர்வாகிகள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து பஸ்ஸில் ஏற்றி அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.