தருமபுரியில் தனியார் பங்களிப்புடன் ரூ. 39. 14 கோடி மதிப்பீட்டில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தருமபுரி நகரில் தற்போது புறநகர் பேருந்து நிலையம் மற்றும் நகரப் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. அடுத்தடுத்து அமைந்துள்ள இந்த பேருந்து நிலையங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன. ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் பொதுமக்களும் வந்து செல்கிறார்கள். இந்த பேருந்து நிலையங்களை சுற்றி ஏராளமான வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதிக்கும் ஏராளமான வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் தினம் வந்து வண்ணம் உள்ளனர். மாவட்ட தலைநகரான தருமபுரி நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், நகரின் வளர்ச்சியை கருதியும், பொதுமக்கள் வசதிக்காகவும் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.என்று தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் கலந்த 2018- ஆம் ஆண்டு தருமபுரி தனியார் பங்களிப்புடன் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைப்பதற்கு அரசாணை வழங்கியது. இது தொடர்பாக சென்னை நகராட்சி நிர்வாக ஆணையரும் இந்த திட்டத்திற்கு அனுமதி அளித்தார்.இதற்காக
தருமபுரி
நகரில் பென்னாகரம் ரோட்டில் 10 – ஏக்கர் நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து. தருமபுரி
நகராட்சியில் வருவாய் இழப்பை தடுக்க புதிய புறநகர் பேருந்து நிலையத்தை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. இந்த நிலையில் தருமபுரி நகராட்சி சார்பில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் மீண்டும் விறுவிறுப்படைந்துள்ளது.
தனியார் பங்களிப்புடன் ரூ.39.14 கோடி மதிப்பில் இந்த புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டும் பணிக்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் அமைச்சர் நேரு தலைமையில் நடைபெற்ற மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்கள் கூட்டத்தில் தருமபுரி புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைப்பதற்கான எல்லா முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என்று தருமபுரி நகராட்சி ஆணையாளரை அறிவுறுத்தி உள்ளார். இதனால் தருமபுரியில் தனியார் பங்களிப்புடன் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. இதற்கான கட்டுமான பணிகளை விரைவில் தொடங்கும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.