ஊட்டி. ஜன. 11.
நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் குன்றின் குறல்கள் அமைப்பு நீலகிரி மாவட்ட தாயகம் திரும்பிய தமிழர்கள் வாழும் கிராமக் குழந்தைகளின் கல்வி மற்றும் கலை பண்பாட்டுத்திறன்களை வெளிக்கொணர்ந்து ஊக்கப்படுத்தும் விதமாக கடந்த 10 ஆண்டு காலமாக பொங்கல் விழாவை சிறப்பு நிகழ்வாக நடத்தி வருகிறது. 25 கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பபட்ட குழந்தைகள் கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகளையும் விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தி போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு மட்டுமின்றி போட்டியில் பங்கு கொண்ட அத்தனை குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கி சிறப்பித்து வருகிறார்கள். அதோடு மாநில அளவில் புகழ்பெற்ற கிராமிய கலை குழுக்களை அழைத்து சிறப்பு கலை நிகழ்வுகளான தமிழர் கலை பண்பாட்டு விழாக்களான பறையாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், கோலாட்டம், மாடு ஆட்டம், மயிலாட்டம், சாட்டை குச்சி ஆட்டம், நாட்டுப்புற நடனங்கள் ஆகிய கிராமிய கலை நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர் . இந்த ஆண்டு சிறப்பு நிகழ்வாக திரைப்பட பின்னணி பாடகர் கலைமாமணி முனைவர் சித்தன் தே. ஜெயமூர்த்தி வழங்கும் மனதை மயக்கும் மக்கள் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பதினோராம் ஆண்டிற்கான குன்றின் குரல்கள் சிறப்பு விருதுகளை இந்த ஆண்டு 12 நபர்களுக்கு அறிவித்திருக்கிறார்கள். அதன்படி மலையகத்தின் குரல் விருதினை வழக்கறிஞர் குயிலரசன் அவர்களுக்கும், மலையக சிற்பி சிவலிங்கனார் விருது நெல்லை கண்ணன் அவர்களுக்கும், மக்கள் சேவகர் விருது போ. சிவகுமார் அவர்களுக்கும், தோழமை விருதுகளை ஜேபிஎஸ் லியாகத் அலி, மற்றும் சுமதி சுரேஷ், ஆகியோர்களுக்கு வழங்கப்படுகிறது. மக்கள் பண்பாளர் விருதினை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு அவர்களுக்கும், திருச்செந்தூரனார் விருதை வழக்கறிஞர் மூ. வா. முனிரத்தினம் அவர்களுக்கும், நாளைய தலைவர் விருதினை ஆல்வின் அவர்களுக்கும், உரிமை போராளி விருதினை ஜெய்சங்கர் அவர்களுக்கும், தோழமை விருதினை முருகன் அவர்களுக்கும், பாராட்டு விருதினை மாநில அளவில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற செல்வி சி யாழினிக்கு பாராட்டு விருதினையும் வழங்க உள்ளனர்.
மேற்கண்ட நிகழ்வுகள் தமிழர் திருநாளாம் பொங்கல் நாளில் 15 .01. 2025 புதன்கிழமை கோத்தகிரி தினசரி சந்தை திடலில் கோத்தகிரி குலுங்க நடைபெறும் என விழா குழுவினர் அறிவித்துள்ளனர். சமவெளி பகுதிகளில் ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதை போல மலை மாவட்டமான நீலகிரியில் குன்றின் குரல்கள் அமைப்பு நடத்தும் தமிழர் பண்பாட்டு கலை விழா எழுச்சியுடன் நடைபெற்று வருவது பாராட்டுக்குரியது.