கோவை, ஜூலை 02 –
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை தலைமை இடமாக கொண்டு செயல்படும்
அசார் பழனிச்சாமி கிரிக்கெட் சங்கம் சுமார் 1000 போட்டிகளை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது. மாணவர்களுக்கு பயிற்சி கட்டணமில்லாத விளையாட்டு சேவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
1999ல் ஆரம்பிக்கப்பட்ட சங்கம் மாவட்ட, மாநில அளவிலும் போட்டிகளில் பல சாதனைகள் படைத்துள்ளது. இந்த சங்கத்தில் இருந்து பல வீரர்கள் தமிழ்நாடு அளவிலான போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.
இதன் வெற்றி விழா, பூசாரிபட்டி பொள்ளாச்சி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரியின் முதன்மை கல்வியாளர் முத்துச்சாமி அவர்கள் தலைமை தாங்கி சிறந்த வீரர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கி சிறப்பித்தார்.
பொள்ளாச்சி முதலுதவி சமூக நல அறக்கட்டளை தலைவர் முனைவர் அபு. இக்பால் முன்னிலை வகித்து வீரர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டின் வரலாறு, சமூக நன்மை, உடல்திறன், தன்னம்பிக்கை குறித்து சிறப்புரை ஆற்றி பரிசுகளும், பாராட்டுக் கேடயங்களும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அசார் பழனிச்சாமி கிரிக்கெட் சங்கத்தின் நிறுவனர் சிறிநான் மணிகண்டன், தலைவர் காளிமுத்து, மேலாளர் விஜியகுமார் மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியில் சிறிநான் மணிகண்டன் அனைவருக்கும் நன்றி கூறினார்.