தருமபுரி, ஜூலை 23 –
தருமபுரி மதுராபாய் மண்டபத்தில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு வேல்மாறல் சேவா அறக்கட்டளை நடத்தும் வேல்மாறல் மற்றும் திருப்புகழ் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வேல்மாறல் சேவா அறக்கட்டளை தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் அதிகாலை 4 மணி அளவில் முருகன் வேலுக்கு விஸ்வரூப பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இளநீர், தேன், கரும்புச்சாறு, சந்தனம் ஆகிய வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள் மற்றும் துளசி, ரோஜா, மல்லிகை பூ போன்ற பூக்களால் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து பூஜையில் கலந்துகொண்டு முருகன் பாடலை பாடி பூஜை செய்து சாமியை வழிபட்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை வேல்மாறல் சேவா அறக்கட்டளை சிறப்பாக செய்திருந்தனர். பக்தர்கள், பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.