பூதப்பாண்டி, ஜுலை 14 –
விண்ணப்பித்த தொழிலாளர்கள் அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்கிடவும், அரசு அறிவித்த தினக்கூலி ரூபாய் 336/-ஐ குறைக்காமல் வழங்கிடவும் ஊரக வேலை தொழிலாளர்கள் வசித்து வரும் கிராமங்களில் குடிநீர் சாலை, தெருவிளக்கு, பேருந்து, பட்டா, பகுதிநேர ரேசன் கடை உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தியும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பூதப்பாண்டியிலுள்ள தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய செயலாளர் ராஜன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் மிக்கேல் தொடக்கி வைத்து பேசினார். சிபிஐஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெஜீஸ்குமார் வாழ்த்தி பேசினார். ஒன்றிய தலைவர் பால்மர், பொருளாளர் சௌமியா, நிர்வாகிகள் ஜாண்சன் பாக்கியதாஸ், ஐயப்பன், பிச்சம்மாள், ஜிஜி சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர் என்.எஸ். கண்ணன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். பின்னர் ஊராட்சி ஒன்றிய மேலாளரிடம் வேலை கேட்டு மனுக்கள் கொடுக்கப்பட்டன.