விழுப்புரம், ஜூலை 26 –
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் விவசாயிகள் வைத்த கோரிக்கைகளாவது: விழுப்புரம் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை மூலம் 50 சதவீத மானியத்தில் முருங்கை பயிர் சாகுபடி செய்வது குறித்து பயிற்சிகள் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். கரும்பு பயிரில் செயற்கை நுண்ணூட்டம் (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தி உற்பத்தியை பெருக்குவது குறித்து வேளாண் அறிவியல் நிலையம் மூலம் பயிற்சி அளிக்க வேண்டும். கரும்பு பயிரில் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்திட முழு மானியம் வழங்கப்பட்டது. தற்பொழுது மீண்டும் அதனை செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆடி பட்டத்திற்கு தேவையான விதைகள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைத்திடவும் அதன் உற்பத்தி திறனை உறுதி செய்திட வேண்டும். கூட்டுறவுத்துறை சார்பில் வாடகைக்கு விடப்படும் வேளாண் இயந்திரங்கள் விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், திட்டங்கள் குறித்து கையேடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கால்நடைகளை வெறிநாய் கடித்தால் அதற்கான இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவும், சவுக்கு பயிருக்கு குறைந்த விலை குறைந்து வருவதால் விழுப்புரம் மாவட்டத்திலேயே காகித ஆலை அமைத்திட கோரிக்கை வைத்தனர்.
மேலும், தனியார் உரக்கடைகளை வேளாண்மைத் துறை சார்பில் ஆய்வு செய்திடவும், மணிலா பயறு வகைகளுக்கு மானியம் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் கூடுதலாக நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறந்திடவும், புதியதாக உழவர் பாதுகாப்பு அட்டை வழங்கிட வருவாய்த் துறை மூலம் நடவடிக்கை எடுத்திடவும், புயல் மற்றும் மழையினால் இடிந்து விழுந்த கிணறுகளை மறுசீரமைக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும். நந்தன் கால்வாய் திட்டம் செயல்படுத்தும் போது நேமூர் சுற்றியுள்ள கிராமங்களை இத்திட்டத்தில் இணைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலவச மின்இணைப்பு வழங்கும் திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்திற்கு கூடுதல் இலக்கு அரசிடமிருந்து பெற்று தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
விவசாயிகள் வைத்த பொதுவான கோரிக்கைகளாவது: அனைத்து ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்றவற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு இடங்கள் போன்ற ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், பல்வேறு அணைக்கட்டுகளின் கரைகளை பலப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் பேசும்போது ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகள் அனைத்தும் சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக தீர்வு காணப்பட்டு வருகிறது. அதேபோல், இன்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகளும் விரைந்து தீர்வு காணப்படும். மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் “உங்களுடன் எஸ்டாலின்” திட்டம் முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் விவசாய பெருங்குடி மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி பயன்பெற்றிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பிரேமலதா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திரு.அன்பழகன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.