ஈரோடு, ஜூன் 30 –
ஈரோடு மாவட்ட புதிய ஆட்சியராக கந்தசாமி நியமனம் செய்யப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார். இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு மாவட்டம் சிப்காட்டில் உள்ள சுற்றுச்சூழல் பிரச்சினை அதற்கான தீர்வு காணும் வகையில் கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சரால் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அப்பணியினை சீரிய முறையில் நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. மேலும் விவசாயத்தை பெருக்குவதும், பள்ளி கல்வியில் கவனம் செலுத்துவதும் எனது முக்கிய பணி.
தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்கள், வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அரசின் முன்னோடி திட்டங்கள் சரியாக நடைமுறைப்படுத்தி செயல்படுத்தப்படும். சரியான பயனாளிகளை அடையாளம் கண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். தகுதி வாய்ந்த பயனாளிகளை தேர்வு செய்து அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்கவே மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் அரசு அலுவலர்கள் சென்று பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும், தகுதி வாய்ந்த நபர்களுக்கு அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.
மேலும், சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் திட்டமிட்டு முகாம்கள் நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இம்மருத்துவ முகாம்களை மருத்துவத்துறை சார்ந்த அலுவலர்களுடன் இணைந்து சிறப்பாக மேற்கொள்ள உள்ளோம். மேலும், மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகளை திட்டமிட்டு செயல்படுவோம்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து பொதுமக்களின் குறைகளை கேட்டு கணினியில் பதிவு செய்யப்பட்டு தீர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்த முறையினால் மக்கள் அரசை தேடி வந்த நிலையை மாற்றி தற்போது அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு நிர்வாகம் பொதுமக்களை தேடி சென்று தீர்வு வழங்குவது என்பது நிர்வாகத்தின் படிநிலை வளர்ச்சி ஆகும். இதற்கு முன்னர் மேற்கொண்ட பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும், மக்களின் தேவைகளை நிறைவேற்றிடவும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட அரசுத்துறையினர் மூலம் தொடர்ந்து முயற்சிகள் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆட்சியர் அலுவலகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.