விழுப்புரம், ஆகஸ்ட் 08 –
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை சார்பில் மாதந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில் விழுப்புரம் மாவட்டத்தில் நீர்வளத்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறியப்பட்டது.
அதன்படி விழுப்புரம் வட்டம் கொங்கம்பட்டு கிராமத்தில் மலட்டாறு குறுக்கே ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அணைகட்டு பணியின் முன்னேற்றம் குறித்தும் செஞ்சி வட்டம் மேல்களவாய் கிராமத்தில் வராக நதி குறுக்கே ரூ. 8.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அணைகட்டு பணியின் முன்னேற்றம் குறித்தும், திண்டிவனம் வட்டம், பெரமந்தூர் ஏரி, சிங்கனூர் பெரிய ஏரி, ஜக்காம்பேட்டை பெரிய ஏரி மற்றும் சித்தேரி ஏரி ஆகிய ஏரிகளை ரூ. 8.00 கோடி மதிப்பீட்டில் புணரமைக்கும் பணியின் முன்னேற்றம் குறித்தும், விழுப்புரம் நரியாறு ஓடையினை ரூ. 2.00 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணியின் முன்னேற்றம் குறித்தும், விக்கிரவாண்டி வட்டம், பனமலை ஏரி உட்பட சுற்றியுள்ள 11 ஏரிகளை ரூ. 6.25 கோடி மதிப்பீட்டில் புணரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களுடன் விரிவாக கேட்டறியப்பட்டது.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகளின் திட்டங்கள் குறித்த விவரங்கள் கேட்டறியப்பட்டது. அதன்படி, விக்கிரவாண்டி வட்டம் வழுதாவூர் கிராமம் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூ.30.00 கோடி மதிப்பீட்டில் அணைகட்டு கட்டுவதற்கான திட்ட பணி குறித்தும், வீடூர் அணை கதவுகள் ரூ. 38.36 கோடி மதிப்பீட்டில் புணரமைப்பதற்கான திட்ட பணி குறித்தும், எல்லிஸ் அணைக்கட்டில் ஆழாங்கால் வாய்க்கால் பிரிவு சுவர் கட்டுவதற்கான திட்ட பணி குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களுடன் விரிவாக கேட்டறியப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஏரி, குளம் போன்ற நீர் பிடிப்பு பகுதிகளில் சீமை கருவேல மரங்கள் அகற்றுவது, வண்டல் மண் எடுப்பது போன்ற பணிகளில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையில் இருக்க வேண்டும்.
பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறியப்பட்டது. அதன்படி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவுக்கான கட்டட பணியினை குறித்தும், வானூர், மரக்காணம், செஞ்சி, வளவனூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு வரும் ஸ்மாட் பள்ளி கட்டட பணிகள் குறித்தும், நாபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பள்ளி வகுப்பறை கட்டட பணிகள் குறித்தும் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மேற்கண்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து விரிவாக கேட்டறியப்பட்டது.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகளின் திட்ட பணிகள், தற்போது நடைபெற்று வரும் திட்ட பணிகள் அனைத்தும் விரிவாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் விழுப்புரம் நீர் வளத்துறை செயற்பொறியாளர் அருணகிரி, நீர் வளத்துறை உதவி செயற்பொறியாளர் அய்யப்பன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் இராஜவேல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.