விளாத்திகுளம், செப்டம்பர் 27 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கல்லாத்து முனியசாமி திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு சின்ன மாடு, பூஞ்சிட்டு, தேன் சிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, இராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 60 ஜோடிக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் போட்டியில் கலந்து கொண்டன.
முதலாவதாக நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 25 ஜோடி காளைகள் கலந்து கொண்ட இந்த மாட்டு வண்டி போட்டியானது இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பெரியசாமிபுரம் முதல் வேம்பார் சாலையில் நடைபெற்றது. இந்த சின்ன மாட்டு வண்டி போட்டிக்கு 6 மைல் தூரம் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த போட்டியை விளாத்திகுளம் தேமுதிக கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கச்சாமி, விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் சக்திவேல், விளாத்திகுளம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி அமைப்பாளர் சடையாண்டி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டிக்கு வெற்றி இலக்காக 5, மைல் தூரம் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில் 29 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன இந்தப் போட்டி இரு பிரிவுகளாக நடைபெற்றது. இந்த பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டிக்கு ஆறு மைல் தூரம் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேன்சிட்டு மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் 11 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இந்தப் போட்டிக்கு வெற்றி இலக்காக 5 மைல் தூரம் நிர்ணயிக்கப்பட்டது. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில்
வெற்றி இலக்கை நோக்கி காளைகள் சீறி பாய்ந்தன. விழாவின் முடிவில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கும் ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசு தொகை மற்றும் குத்துவிளக்கு கொடுத்து கவுரவிக்கப்பட்டனர். இந்த மாட்டு வண்டி போட்டி பந்தயத்தினை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சபாபதி ஏற்பாடு செய்து இருந்தார். மேலும் இந்த மாட்டு வண்டியை போட்டியை காண வேம்பார் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் சாலையின் இருபுறமும் கூடி நின்று கைதட்டி உற்சாகப்படுத்தினர். ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



