திங்கள்சந்தை, ஆக 4 –
வில்லுக்குறி ஊராட்சியில் பில் கலெக்டராக பணிபுரிந்து வருபவர் ஜீவா (31). இவரது கணவர் ஜோசப் ஜெயசிங். இவர்கள் அஞ்சுகிராமம் பகுதியைச் சேர்ந்தவர்கள். வில்லுக்குறி பேரூராட்சியில் பணிபுரிவதால் இவர்கள் இருவரும் வில்லுக்குறி வெள்ளிச்சிவிளை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் ஜீவாவின் பணியின் பயிற்சி விஷயமாக ஈரோடு பகுதியில் உள்ள பவானிசாகர் பயிற்சி நிலையத்திற்கு பயிற்சிக்கு கடந்த 1-ம் தேதி சென்றுள்ளார். அங்கு சென்று தனது கணவர் ஜோசப் ஜெயசிங்கிற்கு தொலைபேசியில் அழைத்த போது அவர் போன் எடுக்கவில்லை.
இதனால் ஜீவா தனது உறவினர் ஒருவருக்கு போன் செய்து வீட்டில் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அங்கு சென்று உறவினர் பார்க்கும்போது வீட்டின் கதவுகள் திறந்த நிலையில் கிடந்துள்ளது. பின் அந்த உறவினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது ஜோசப் ஜெயசிங் அங்கு இல்லை. இச்சம்பவம் குறித்து அந்த உறவினர் ஜீவாவிடம் கூறியதின் பேரில் சந்தேகம் அடைந்த ஜீவா பயிற்சியில் இருந்து அனுமதி விடுப்பு பெற்று வீட்டிற்கு வந்து பின் இரணியல் காவல் நிலையத்தில் கடந்த இரண்டாம் தேதி கணவனை காணவில்லை என்று புகார் அளித்தார்.
இந்த நிலையில் நேற்று சுங்கான் கடை அருகே உள்ள ஐக்கியான்குளம் அருகே பைக்கு ஒன்று இரண்டு நாட்களாக நிற்பதாக இரணியல் போலீசருக்கு தகவல் கிடைத்தது. சம்பவம் இடம் சென்ற இரணியல் போலீசார் விசாரணை நடத்தினர். பின் ஜீவாவின் உறவினர்கள் சுங்கான் கடை வந்து பைக்கினை அடையாளம் கண்டு குளத்தினை சுற்றி தேடி உள்ளனர்.
அப்போது குளத்தில் உள்ளே ஆண் பிணம் ஒன்று இறந்து மிதந்த நிலையில் கிடந்துள்ளதை கண்டுள்ளனர். உடனே இரணியல் போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த தீயணைப்பு துறையினர் குளத்தில் இறங்கி உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின் போலீசார் பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின் ஜீவா கொடுத்த அங்க அடையாளங்களை வைத்து இறந்தவரின் உடலை பரிசோதித்த போலீசார் அவர் கையில் அணிந்திருந்த கயறு மற்றும் டேட்டோ அடையாளங்களைக் கண்டு ஜீவாவிற்கு தகவல் தெரிவித்தனர். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை வந்த ஜீவா இறந்தவரின் உடலை பார்த்து தனது கணவர் தான் என்று கூறியதின் பேரில் இரணியல் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.