கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் குடிநீர் விநியோகம் மற்றும் வெப்பச்சலன விழிப்புணர்வு குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலர், எரிசக்தி துறை மரு.பீலா வெங்கடேசன் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு முன்னிலையில், அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலர், எரிசக்தி துறை மரு.பீலா வெங்கடேசன் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊரகம் மற்றும் நகர்புறங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீரினை முறையாக குளோரினேசன் செய்தப் பின்னரே வழங்கப்பட வேண்டும். மழைக்காலத்திற்கு முன்னர் தண்ணீரினை சேமிக்கும் வகையில், வீடுகள் தோறும் உருஞ்சிக் குழிகள் அமைக்கவும், வீடுகள் மற்றும் நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குறைந்த மின்னழுத்தம் உள்ள பகுதிகளில் மின்வாரியத்தால் சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்தின் வாயிலாக தினசரி வழங்கும் குடிநீர் அளவான 75.46 எம்.எல்.டி குறையாதவாறு தொடர்ந்து விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பழுது ஏற்படும் குடிநீர் குழாய் இணைப்புகளை உடனுக்குடன் பழுதுநீக்கம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
தமிழ்நாடு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் வாயிலாக விநியோகம் செய்யப்படும் 21 திட்டங்களின் மூலம் தடையின்றி குடிநீர் வழங்கப்பட வேண்டும். முன்னேற்றத்தில் உள்ள 1350 குடிநீர் பணிகளில் தனிநபர் வீட்டுகுடிநீர் இணைப்பு வழங்கும் (FHTC) பணிகளைத் தவிர்த்து ஏனையப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து உடனடியாக பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேலும், தற்போது கோடைக்காலம் என்பதால் பொதுமக்கள், குழந்தைகள், பள்ளி மாணவ,
மாணவிகள், வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலக் குறைபாடுகள் உடையவர்கள் ஆகியோர் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக நிழலுக்குச் செல்ல வேண்டும். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாட வேண்டும். பணிநேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும்போதிய அளவு நீரை தொடர்ந்து பருக வேண்டும்.
மேலும், வெப்பத்தினால் ஏற்படும் அம்மை பெரியம்மை, தட்டம்மை மஞ்சள் காமலை போன்ற நோய்களிலிருந்து பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித்தாய்மார்களை பாதுகாத்துக்கொள்ள அதிக அளவு நீர் சத்துள்ள பழங்கள், மோர், அரிசிக்கஞ்சி, இளநீர், பானகம், மோர் கலந்தகூழ், எலுமிச்சை ஜூஸ், வெள்ளரிபிஞ்சி, நுங்கு மற்றும் காய்கறிகள் அதிகமாக சாப்பிட வேண்டும். வெளியே செல்லும்போதும், திறந்த வெளியில் வெலை செய்யும் போதும் தலையில் பருத்தித் துணி, துண்டு, தொப்பி அணிந்துகொள்ள வேண்டும்.
மேலும், வெப்பம் தொடர்பான நோய்கள் குறித்து சிகிச்சை வழங்குவதற்கு ஏதுவாக ஆரம்ப சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்கள், சமூகநல மையங்கள், மகப்பேறு மருத்துவமனைகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான பேருந்து நிலையம், சந்தை உள்ளிட்ட இடங்களில் நிழலுடன் கூடிய தண்ணீர் பந்தல்கள் மூலம் சுகாதாரமான குடிநீர் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி தண்ணீர் பந்தல்களில் பொதுமக்களுக்கு கூடுதலாக ஓ.ஆர்.எஸ் உப்புக்கரைசல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் பொது சுகாதாரத்துறை சார்பாக 20 இடங்களிலும், பேரூராட்சிகள் துறை சார்பாக 16 இடங்களிலும் ஓ.ஆர்.எஸ்.கலவை வழங்கப்படுகிறது.
எனவே பொதுமக்கள் தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வெண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலர், எரிசக்தி துறை டாக்டர்.பீலா வெங்கடேசன் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலர், எரிசக்தி துறை அவர்கள், கிருஷ்ணகிரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில், வெப்பச்சலனத்தையொட்டி, பொதுசுகாதாரத்துறை மற்றும் நோய்தடுப்பு மருந்து துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள ஓ.ஆர்.எஸ். திரவம் குடிநீர் கலவை பொதுமக்களுக்கு வழங்கப்படுவதையும், கிருஷ்ணகிரி நகராட்சித்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தல், கட்டிகானப்பள்ளி ஊராட்சி, ராயக்கோட்டை ரோடு, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலில் குடிநீர் வழங்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் மேற்பார்வைபொறியாளர் அலுவலக
கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்ட மத்திய அலுவலகத்தில், 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் 9498794987 என்ற மின்னக கைபேசி எண் மூலம் மின் நுகர்வோர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள் குறித்தும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நிலுவையில் உள்ள புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணவேண்டும் என மின்வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், மின்தடை குறித்த புகார் மீதான ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஓசூர் அந்திவாடியைச் சேர்ந்த மின்பயனாளி சரஸ்வதி அவர்களிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.தற்போது கோடை மழை தீவிரமடைந்துள்ள நிலையில் போர்கால அடிப்படையில் பழுதடைந்துள்ள மின் கம்பங்கள் சரிசெய்தல், மின் மாற்றிகளின் தரத்தை உறுதிசெய்து தடையில்லா மின் விநியோகத்தை உறுதி செய்தல் மற்றும் மின் தடை பணிகளை துரிதமாக சீராக்குவதிலும், தளவாடப் பொருட்களின் இருப்பை உறுதி செய்யவும் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், அனைத்து களப்பணியாளர்களும் பணியின் போது உரிய பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றி பணிகளை துரிதமாகவும், பாதுகாப்பாகவும் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மின் பகிர்மான அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, பர்கூர் பேரூராட்சியில், வெப்பச்சலனத்தையொட்டி, பேரூராட்சிகள் துறை சார்பாக, அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலில், ஓ.ஆர்.எஸ். திரவ குடிநீர் கலவை, தண்ணீர் பொதுமக்களுக்கு வழங்கி, வெப்பச்சலனத்திலிருந்து தற்காத்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார். தொடர்ந்து, பர்கூர் அரசு மருத்துவமனையில் வெப்பச்சலனம் குறித்து அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பிரிவு மற்றும் மருந்து இருப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், பர்கூர் ஊராட்சி ஒன்றியம், பாலேப்பள்ளி ஊராட்சி, சூரன்குட்டை கிராமத்தில் மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், விவசாயி சாமக்கால் க/பெ.பெரியபைரன் அவர்களின் 1.50 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.2 இலட்சம் மதிப்பில் மழைநீரை சேகரிக்கும் பொருட்டு மண்வரப்பு அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பொது மருத்துவத்துறை சார்பாக வெப்பநிலை சார்ந்த நோய்த்தடுப்பு தனி சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், கூடுதல் ஆட்சியர் வந்தனா கார்க் ஓசூர் மாநகராட்சி ஆணையர் சினேகா ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா மாவட்ட வன அலுவலர் செல்வி.கார்த்திகேயாயிணி மாவட்ட ஆட்சித்தலைவர் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பா, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் பாபு, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.ரமேஷ்குமார், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கணேஷ், ஊரக வளர்ச்சிதுறை செயற்பொறியாளர் மலர்விழி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மகாதேவன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.பூவதி, தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் (பொது) வேலு, பர்கூர் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், பொறியாளர் மகேந்திரன் பர்கூர் வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார் மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செயல் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்
கலந்துக்கொண்டனர்