திருப்பூர், செப்டம்பர் 15 –
ஓரணியில் தமிழ்நாடு தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கூட்டம் திருப்பூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மாவட்ட திமுக கழகச் செயலாளரும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான க. செல்வராஜ் பேசுகையில்: ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்ட 70 நாட்களில் திருப்பூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட தெற்கு மற்றும் பல்லடம் சட்டமன்ற தொகுதிகளில் மட்டும் 3 லட்சத்து 20 ஆயிரத்து 267 பேரை இணைத்துள்ளதாகவும் தமிழ்நாட்டை பாதுகாக்கும் ஓரணியில் நின்று போராடுவோம் என்று தெரிவித்தார்.
திருச்சியில் விஜய் பரப்புரை பயணம் மற்றும் திருப்பூர் வருகை குறித்த செய்தியாளர் கேள்விக்கு, அவர் வரட்டும், வந்து பிரச்சாரம் செய்யட்டும். எவ்வளவு கூட்டம் கூடினாலும் தளபதியை வெல்ல முடியாது என தெரிவித்தார். மேலும் ரீல் அந்து போச்சு என பேசுவது அரசியல் அனுபவம் இல்லாமல் பக்குவமற்ற வார்த்தைகளை பேசி வருகிறார். வயதுக்கு ஏற்ற பேச்சு அவரிடம் இல்லை என தெரிவித்தார். மேலும் களத்தில் தாங்கள் விசாரித்த வரை விஜய் அதிமுக ஓட்டுக்களை தான் பிரிப்பார். திமுக வாக்கு வங்கி அப்படியே உள்ளது என தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார். உடன் மாநகர செயலாளர் டி.கே.டி.மூ. நாகராஜ், துணைச் செயலாளர் நந்தினி, டிஜிட்டல் சேகர், பகுதி செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, பகுதி செயலாளர் உசேன், ஐடி வின் அமைப்பாளர் சூர்யா மற்றும் பலர் உடன் இருந்தனர்.



