தேனி, ஜூலை 2 –
தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், இலட்சுமிபுரம் ஊராட்சியில் இன்று (02.07.2026) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் விக்சித் பாரத் – கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் திட்டத்தின் செயல்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் க.சபரி ஐங்கரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இத்திட்டமானது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை நாட்களை 125 நாட்களாக மாற்றி புதிதாக அமைக்கப்பட்ட விக்சித் பாரத் – கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்கம் துவக்கப்பட்டு இன்றுமுதல் இத்திட்டம் ஊராட்சிப் பகுதிகளில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 318 பணிகள் உருவாக்கப்பட்டு, ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை அப்பகுதி மக்களே தேர்வுசெய்து, பணிகளை முடித்து தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக திகழும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு 60% மத்திய அரசு நிதியும், 40% மாநில அரசு நிதியும் பங்களிப்பு நிதியாக வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 2047-ஆம் ஆண்டிற்குள் அனைத்து ஊராட்சிகளும் முழுமையான வளர்ச்சிப் பெற்று வளர்ந்த பாரதமாக அமைந்திட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முழுமையான நோக்கமாகும்.
மேலும், இத்திட்டத்தில் பணிக்காலங்களில் விவசாயப் பணிகள் பாதிக்காத வகையில் 60 நாட்கள் விடுமுறை காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயப் பணிகள் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. அதேபோல், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகள் முழுக்க முழுக்க அப்பகுதி மக்களை வைத்து செயல்படுத்தப்படும். ஒப்பந்ததாரர்களின் பணி முற்றிலும் தடுக்கப்படுகிறது. இதனால் கிராமப் பகுதிகளில் உள்ள தனி நபர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு இத்திட்டம் மிகப்பயனுள்ளதாக இருப்பதுடன் ஊராட்சியின் வளர்ச்சியையும் முழுமை பெறும் திட்டமாக அமைந்திட உள்ளது என தெரிவித்தார்கள்.



