வத்தலக்குண்டு, ஆக. 25 –
வத்தலக்குண்டு அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் இரா. விசுவாதன் மேடையில் பேசிக்கொண்டிருந்த போது அவரது பேச்சைக் கேட்காமல் அதிமுக தொண்டர்கள் பிரியாணி சாப்பிட சென்றதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பெயர் வாசிப்பதில் ஒன்றிய நிர்வாகி பெயரை தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ சொல்லாததால் நிர்வாகி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் மேடையில் பரபரப்பு ஏற்படுத்தியது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வத்தலகுண்டு மேற்கு, கிழக்கு ஒன்றிய பூத்து கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நிலக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தேன்மொழி சேகர், வத்தலகுண்டு ஒன்றிய கழகச் செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள் உட்பட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மேடையில் அதிமுக நிலக்கோட்டை எம்.எல்.ஏ தேன்மொழி சேகர் கூட்டத்தில் நிர்வாகிகளை வரவேற்றுப் பேசும்போது வத்தலகுண்டு மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் மணிகண்டன் என்பவர் பெயரை வாசிக்க தவறியதால் ஆத்திரமடைந்த நிர்வாகி மணிகண்டன், மேடையில் முன்னாள் அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான நத்தம் இரா. விசுவநாதன் பேசும்போது அதிமுக தொண்டர்களுக்கு பிரியாணி வாடை பட்டதால் முன்னாள் அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது அவரது பேச்சைக் கேட்காமல் தொண்டர்கள் அனைவரும் எழுந்து பிரியாணி உணவு அறைக்குள் முண்டியடித்துக் கொண்டு வேகமாக பிரியாணி சாப்பிட சென்றனர். அப்போது தொண்டர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனை கவனித்த முன்னால் அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் அவசர அவசரமாக உணவு அறையின் கதவை மூடச் சொன்னார். இதனால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் கூட்டம் விரைவாக முடிக்கப்பட்டது. தொண்டர்கள் நத்தம் இரா. விசுவநாதன் பேச்சை கேட்க ஆர்வமில்லாத நிலையில் அவர் சிறிது நேரம் மட்டும் பேசினார். அப்போது இருக்கைகள் காலியாக காணப்பட்டது. காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் மதியம் ஒரு மணிக்கு மேல் கூட்டத்திற்கு வந்ததால் அதிமுக தொண்டர்கள் பசி தாங்காமல் பிரியாணி அறைக்குள் சென்றதாக கூறப்பட்டது. வத்தலகுண்டில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பிரியாணி சாப்பிடுவதற்காக ஏற்பட்ட சலசலப்பால் பரபரப்பு காணப்பட்டது.


