இராமேஸ்வரம், செப். 17 –
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா செப். 21 இல் தொடங்கி அக். 02 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மஹாளய அமாவாசையை நாளான செப்.21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரம் கோயிலில் இரவு எட்டு மணிக்கு சுவாமி அம்பாள் வெள்ளிரத வீதியுலாவை தொடர்ந்து காப்புகட்டுதலுடன் நவராத்திரி உற்சவம் தொடங்குகிறது.
அதனை தொடர்ந்து கோயில் அம்பாள் சன்னதியில் செப்.22 நவராத்திரி உற்சவத்தின் முதல் நாளில் பர்வதவர்த்தினி அம்பாள் முந்தங்கி சேவை அலங்காரத்திலும், இரண்டாம் திருநாளில் அன்னபூரணி திருக்கோலத்தில் கொலுவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தல் நடைபெறும். தொடந்து மூன்றாம் திருநாள் மகாலெட்சுமி, நான்காம் நாள் சிவ துர்க்கை, ஐந்தாம் நாள் சரஸ்வதி, ஆறாம் நாள் கொளரி சிவபூஜை, ஏழாம் நாள் சாரதாம்பிகை, எட்டாம் நாள் கெஜலெட்சுமி, ஒன்பதாம் நாள் மஹிஷாஸர மர்த்தினி, பத்தாம் நாள் துர்கா, லெட்சுமி, சரஸ்வதி என மூன்று தேவியர்கள் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
நவராத்திரி உற்சவத்தின் பத்து திருநாட்களும் தினமும் மாலை 6:30 மணி முதல் 8:30 வரை பரதநாட்டியம், பட்டிமன்றம், ஆன்மீக சொற்பொழிவு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. இதே போன்று பத்திரகாளியம்மன், நம்புநாயகி அம்மன், துர்க்கை அம்மன், ஸ்ரீ தர்ம முனீஸ்வரர், முத்துமாரியம்மன் ஆகிய கோயில்களிலும் நவராத்திரி திருவிழா தொடங்குகிறது.



