ராமேஸ்வரம், ஜூலை 25 –
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி புனித ஸ்தலமாக விளங்கி வருகின்றது. இந்த திருக்கோவிலில் நம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளய அமாவாசை போன்ற காலங்களில் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி திதி கொடுத்து வழிபாடு நடத்தினால் பாவ விமோச்சனம் அடைவார்கள் என்பது ஐதீகம். இதனால் இந்த கோவிலில் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்துவதற்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நள்ளிரவு முதலே ராமேஸ்வரத்தில் குவிந்தனர்.
அதிகாலையில் அக்னி தீர்த்த கடற்கரையில் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி பிதுர்ஹர்மா பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். இதனை தொடர்ந்து ராமநாத சுவாமி திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்ற பின்பு ஸ்ரீ ராமர் அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. பொதுமக்கள் பக்தர்கள் கோவிலுக்கு உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடிய பின் தரிசனம் செய்தனர்.
இந்த ஆடி அமாவாசைக் காண பாதுகாப்பு ஏற்பாட்டினை மாவட்ட கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையில் 1 ஏடிஎஸ்பி, 3 துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர், சிறப்பு காவல் ஆய்வாளர் என சுமார் 450 போலீசார் பட்டாலியன் ஆயுதப்படை காவலர்கள், ஊர்க்காவல் படை காவலர்கள் குவிக்கப்பட்டனர். மேலும் கோவில் நான்கு ரத வீதி அக்னி தீர்த்தம் ஆலயம் நகராட்சி பார்க்கிங் கோவில் வாகன நிறுத்துமிடம் 22 தீர்த்த கிணறுகள் கோவில் உள்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
திருக்கோவில் நிர்வாகம் சார்பில் ரயில் நிலைய அருகே உள்ள ராம் பார்க் தோப்பில் பக்தர்கள் கட்டணமின்றி தங்கி செல்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இணை ஆணையர் செல்லத்துரை மேற்பார்வையில் ஆடி அமாவாசையொட்டி இன்று ஒரு நாள் மட்டும் கட்டணமில்லா தரிசனத்திற்கு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.