ராமநாதபுரம், பிப். 10 –
தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தலைமைக் கழக அறிவிப்பின்படி சட்டமன்றத் தேர்தல் 2026 திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் திமுக துணைப் பொதுச் செயலாளர் எம்பி கனிமொழி தலைமையில் ராமநாதபுரத்தில் தனியார் மஹாலில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட தொழிற்சங்க நிர்வாகிகள், வர்த்தக சங்க நிர்வாகிகள், மீனவர் சங்க நிர்வாகிகள், விவசாய சங்க நிர்வாகிகள், கல்வியாளர்கள், சிறு குறு தொழில் முனைவோர்கள், மாணவர் சங்க பிரதிநிதிகள், டாக்டர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் சங்கப் பிரதிநிதிகள், திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கினர்.
இதில் குறிப்பாக கண்மாய்கள் குளங்கள் தூர்வார வேண்டும், நகர் பகுதியில் கோயில்கள் பள்ளிவாசல்கள் கிறிஸ்துவ ஆலயங்கள் மருத்துவமனைகள் அருகே செயல்படும் மதுபான கடைகளை அகற்ற வேண்டும், ராமநாதபுரம் நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி துவங்கப்பட வேண்டும், தொழில் பூங்கா அமைக்க வேண்டும், காணாமல் போன ஊரணிகளை ஆக்கிரமிப்பு பிடியிலிருந்து மீட்க வேண்டும், மீனவர்களின் நீண்ட நாள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர்.



