தேனி, அக். 14 –
முல்லைப் பெரியாறு அணைக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து அணைப்பகுதியில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடைபெற்றது. சோதனையில் எந்தவித தடயங்களும் கிடைக்கவில்லை என தமிழக பொதுப்பணி துறையினர் அறிவித்துள்ளனர்.
தமிழக கேரளா எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணை குறித்து கேரளாவில் பல்வேறு வதந்திகள் வந்த நிலையில் இன்று இமெயில் மூலமாக அணைக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கேரளா மாநிலம் திருச்சூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு இ -மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதுகுறித்து திருச்சூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இடுக்கி மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலினை தொடர்ந்து இடுக்கி மாவட்ட காவல்துறையினர், மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் சென்று முல்லைப்பெரியாறு அணையில் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு குறித்த எந்தவித தடயங்களும் கிடைக்கவில்லை என தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து கேரளா காவல்துறை அதிகாரிகள் கூறுகையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்
தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம் அடர்ந்த வனத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் இருக்கும் முல்லைப் பெரியாறு அணைக்குள் அன்னியர்கள் யாரும் அத்தனை எளிதில் பிரவேசிக்க முடியாது என்பதால் வெடிகுண்டு மிரட்டல் குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் இது வெறும் மிரட்டலாக இருக்கும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



