புதுக்கடை, ஜூலை 19 –
குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த சிவாலய ஓட்டம் துவக்கும் முதல் கோயிலான முஞ்சிறை திருமலை மகாதேவர் ஆலயத்தின் அருகில் முஞ்சிறை பகவதி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த கோயிலில் பகவதி அம்மன், ஸ்ரீராமர், ஆஞ்சநேயர் ஆகிய விக்கிரகங்களும் உள்ளது. ஆலயத்தின் வெளிப்புற பகுதியில் ஜீவசமாதிகள் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமாக ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. நிலங்கள் அனைத்தும் தனியார்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த கோயிலானது முன்பு கேரளா மடத்தின் கீழ் செயல்பட்டு வந்தது. அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இணைக்கப்பட்டது. அதன் பின்னர் திருவிழாக்கள் நடத்துவதற்கு ஒரு தடவை மட்டுமே யானைக்கு அறநிலைய துறை ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதரச் செலவுகளுக்கு ரூபாய் வழங்கப்படவில்லை.
பின்னர் ஊர் மக்கள் மிகச் சிறப்பாக திருவிழாக்களை நடத்தி வருகின்றனர். இந்த ஆலயத்திற்கு தற்போது ஆறரை ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோப்பில் உள்ள மரங்களை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் வருவாயில் தான் இந்து சமய அறநிலத்துறையில் இருந்து இங்கு வேலை பார்க்கப்படும் பூசாரி மற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலம் ரூ. 2 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ஏல நாள் முடிந்ததை தொடர்ந்து இந்து சம அறநிலை துறையில் இருந்து நேற்று ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஏலத்தை நடத்துவதற்காக செயல் அலுவலர் கவிதா,அறநிலையத் துறை ஆய்வாளர் தர்மேந்திரன் ஆகியோர் வந்தனர்.
உடனே இந்து மகாசபையை சேர்ந்த வெங்கடேஷ், முஞ்சிறை கிழக்கு ஒன்றிய பாஜ தலைவர் ஸ்ரீகண்டன், முஞ்சிறை கிழக்கு ஒன்றிய காங் தலைவர் ரகுபதி, தினேஷ் உட்பட அனைத்து கட்சியை சேர்ந்த மக்களும் இந்த நிலம் ஏலம் விடுவதற்கு முன்பு சாய்ந்த நிலையில் நின்று கொண்டிருக்கக்கூடிய கொடிமரத்தை நிமிர்த்த வேண்டும், பிம்பத்தை சீர் செய்து, கோயில் புனரமைப்பு பணிகள் துவங்கிய பின்னர் ஏலம் விடலாம் என கூறி ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அதிகாரிகள் தரப்பில் ஏலம் விடுவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது எனவும் மேலும் கோயில் புனரமைப்பு செய்வதற்கு ரூ. 21 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து வேலைக்கான டென்டரும் கொடுக்கப்பட்டுள்ளது, வேலையும் உடனடியாக துவங்கும் எனக் கூறப்பட்டது.
ஆனால் பக்தர்கள் வேலை துவங்கிய பின்னர் ஏலம் விடலாம் என கூறினார். இதனால் பதட்டம் ஏற்பட்டது.
இந்நிலையில் வேலை ஒப்பந்தம் எடுத்த காண்ட்ராக்டர் வரும் திங்கள்கிழமை வேலை துவங்குவேன் என உறுதி கூறிய பின்னர் போராட்டக்காரர்களும் ஏலம் விடுவதற்கு அனுமதி வழங்கி கலைந்து சென்றனர். ஏலம் எடுப்பதற்கு யாரும் வராததால் சற்று நேரம் இருந்து பின்னர் அதிகாரிகள் சென்றுவிட்டனர். இந்த கோயிலில் புனரமைப்பு பணி செய்யும் போது சாய்ந்த நிலையில் இருக்கக்கூடிய கொடிமரத்து நிமிர்த்துவதுடன், கோயில் கட்டடத்தை வர்ணம் பூசி, பரிதாப நிலையில் உள்ள கோயில் கட்டிடத்தையும் கோயிலையும் புனரமைப்புச் செய்ய வேண்டும் அப்பொழுதுதான் பக்தர்களின் கூட்டம் இங்கு அதிகம் வரும் என எதிர்பார்க்கின்றனர். மேலும் இந்த கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க வேண்டும் எனவும் கோயிலில் இருந்து சரி பார்ப்பதற்காக எடுத்துச் சென்ற நகையை மீண்டும் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.