நாகர்கோவில், ஜூலை 30 –
கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் நாளை 31ம் தேதி நிறைவு பெறுகின்ற நிலையில் அம்மாநில துறைமுகங்களை தங்குத்தளமாக கொண்டு மீன்பிடித்து வருகின்ற குமரி மீனவர்கள் கேரளா புறப்பட்டனர். கேரளாவில் மீன் பிடி தடைக்காலம் என்பது மீன்களின் இனப்பெருக்க காலத்தில் கடல் வளங்களை பாதுகாக்கவும், மீன் வளத்தை நிலைத்து நிற்கச் செய்யவும் அமல்படுத்தப்படும் நடவடிக்கையாகும். 2025ம் ஆண்டு இந்த தடைக்காலம் ஜூன் 9ம் தேதி தொடங்கியது. நாளை 31ம் தேதி நள்ளிரவு வரை 52 நாட்களுக்கு அமலில் உள்ளது. இந்த காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி கருவிகளை பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது.
இந்த மீன்பிடி தடைக்காலம் மழைக்காலத்தில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால் இந்த தடை மீன்களின் எண்ணிக்கையை பெருக்குவதற்கு உதவுகிறது. தொடர்ச்சியான மீன்பிடிப்பு கடல் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதை தடுக்கிறது. மீன்வளத்தை பேணுவதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் நீண்ட காலத்திற்கு பாதுகாக்கப்படுகிறது. நாளை நள்ளிரவு தடைக்காலம் முடிவடைந்த உடன் கேரளாவின் கடற்கரை பகுதிகளான கொச்சி, திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா போன்ற இடங்களில் மீனவர்கள் மீன்பிடிப்பை மீண்டும் தொடங்க உள்ளனர்.
கொச்சியின் செல்லானம் மற்றும் முனம்பம் பகுதியில் மீனவர்கள் படகுகளை பராமரித்து மீன்பிடி கருவிகளை தயார் செய்து கடலுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர். கேரளாவை தங்குத்தளமாகக் கொண்டு மீன்பிடி தொழில் ஈடுபட்டு வருகின்ற குமரி மாவட்டம் தூத்தூர், குளச்சல் மண்டல பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கேரளாவிற்கு புறப்பட்டு சென்றனர்.