தருமபுரி, செப். 2:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தீர்த்தகிரி நகரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆசிரியை சித்ரா (50), தெருசாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்தித் தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். இவர் பாலக்கோடு அன்னா தெற்கு ஒன்றிய ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மாற்றுத்திறனாளியான சித்ரா மருத்துவமனை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக நான்கு சக்கர வாகனத்தை பயன்படுத்தி வருகிறார். ஆனால், அவர் வசிக்கும் பகுதியில் சிலர் தெருசாலையை ஆக்கிரமித்து வீடுகளின் முன்பு படிக்கட்டுகள், பூந்தொட்டிகள் உள்ளிட்டவற்றை அமைத்துள்ளதால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
புதிதாக கட்டப்பட்ட வீடுகளாலும் தெருசாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவசர வாகனங்கள் செல்லும் வகையில் பாதையை ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும், ஆக்கிரமிப்பில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.



