சுசீந்திரம், ஜுன் 25 –
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் முன்கள பணியாளர்களுக்குப் பயிற்சி முகாம் நடந்தது. தமிழ்நாடு உரிமைகள் திட்டம் தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்காக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றன. அந்த நலத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று சேர்க்கும் வகையில் உலக வங்கியின் நிதி உதவியுடன் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் நிலா தொண்டு நிறுவனம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் இத்திட்டத்தை கடை கோடி வரை எடுத்து செயல்படுத்த அரசு உத்தரவிட்டது. இந்தத் திட்டத்திற்காக கன்னியாகுமரி மாவட்ட அளவில் 17 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வட்டாரத்திற்கும் மூன்று சமுதாய வழிநடத்துனர் மற்றும் ஏழு சமுதாய மறுவாழ்வு பணியாளர் என மொத்தம் பத்து முன் களப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் மாவட்டத்தில் மொத்தம் 170 முன்களப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பணியாளர்களுக்கு மூன்று நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மூன்றாம் நாள் பயிற்சியானது பயோனியார் குமாரசாமி கல்லூரி வளாக கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தினேஷ் சந்திரன் தலைமையேற்று நடத்தினார். களப்பணியாளர்களுக்குப் பணி ஆணையினை தமிழ்நாடு உரிமைகள் திட்ட கண்காணிப்பு அலுவலர் மருத்துவர் மதுசூதனன் அவர்கள் வழங்கினார். மாநிலத் திட்ட மேலாளர் சங்கர் சகாயராஜ், மாவட்ட திட்ட அலுவலர் திரு ராம் சிவா, நிலா தொண்டு நிறுவன நிறுவனர் பாலானந்த், மாநில கணினி தரவு ஆய்வாளர் மணிகண்டன், திட்ட நிபுணர்கள் டாக்டர் பாலாஜி, தீபன், அன்பரசு ஆகியோர் பயிற்சி அளித்தனர். இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது
முன்களப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகளைக் கண்டறியும் பணியில் ஈடுபடுவார்கள். அந்தப் பணிகள் விரைந்து துவங்கப்பட உள்ளது. அவ்வாறு கண்டறியப்படும் மாற்றுத் திறனாளிகளின் விபரங்கள் கணக்கெடுப்பு மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்படும். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான அரசு நலத்திட்டங்களும் முன் களப்பணியாளர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு மட்டும் மாற்றுத் திறனாளிகள் நேரில் வந்தால் போதும். மற்ற அனைத்துப் பணிகள் சேவைகளையும் இந்த முன் களப்பணியாளர்கள் மேற்கொள்வார்கள். இப்பணிகளை ஒருங்கிணைக்க வட்டாரத்திற்கு ஒரு ஒருங்கிணைந்த சேவை மையம் வீதம் அமைக்கப்பட உள்ளது. இம்மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புக் கல்வி, பிசியோதெரபி, பேச்சுப் பயிற்சி ஆலோசனைகள் போன்ற சேவைகள் வழங்கப்பட உள்ளது என்றார்.