கருங்கல், ஜுன் 30 –
திக்கணங்கோட்டில் இருந்து கருங்கல் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் மத்திகோடு ஜங்சனில் அமைந்திருக்கும் மத்திகோடு மேல்நிலை பள்ளி கூடம் முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்தங்களில் சாலையோரத்தில் ஒரு ராட்சத இலவம் மரம் மற்றும் ஒரு புளிய மரம் உள்ளது. இந்த மரங்கள் சாலையில் சாய்ந்து காணப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன் புளிய மரத்தின் ஒரு ராட்சத கிளை முறிந்து சாலையில் விழுந்தது. அப்போது மின்கம்பங்கள் உடைந்து விழுந்தது. ஆனால் அப்போது வாகனங்கள் மற்றும் பேருந்து நிறுத்தத்தில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் மத்திகோடு அரசு மேல் நிலை பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் இந்த இலவம் மரம் மற்றும் புளிய மரத்தின் அடியில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் தான் பேருந்துக்காக காத்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மாணவ மாணவிகள் எப்போதும் அச்சத்துடன் பேருந்து ஏறுவதற்கு இந்த பேருந்து நிறுத்தங்களில் நிற்கிறார்கள். இதன் அருகில் உயர் அழுத்த மின்கம்பிகள் செல்வது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி பொதுமக்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு பத்மநாபபுரம் சர் ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் பலமுறை கோரிக்கை மனுக்கள் பலமுறை வழங்கியும் இதுவரை அபாயகரமான நிலையில் நிற்கும் இந்த ராட்சத இலவம் மரம் மற்றும் புளிய மரங்களை வெட்டி அகற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் 1077 என்ற எண்ணில் புகார் தெரிவித்தும் இதுவரையிலும் இந்த இலவம் மரம் மற்றும் புளிய மரத்தையும் அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த மரங்களில் வளர்ந்து நிற்கும் பல கிளைகள் தற்போது சாலையில் சாய்ந்தவாறு ஆபத்தான நிலையில் நிற்கிறது. இந்த மரங்கள் அல்லது கிளைகள் முறிந்தோ அல்லது மரங்கள் மூடுடன் பெயர்ந்தோ எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்தால் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆபத்தான நிலையில் காணப்படும் இந்த இரண்டு மரங்களையும் முழுமையாக உடனடியாக வெட்டி அகற்ற வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.