குளச்சல், ஜூன் 28 –
மணவாள குறிச்சி அருகே அம்மாண்டி விளை பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜா (65). வெள்ளிமலை பேரூர் திமுக செயலாளர் ஆக உள்ளார். இவர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இந்த நிலையில் ரங்கராஜாவுக்கு ஊர் கோவில் தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து பத்மநாபபுரம் உதவி கலெக்டர் முன்னிலையில் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதில் ரங்கராஜா கொடுக்க வேண்டிய பழைய வரி பாக்கி செலுத்திவிட்டு கோயிலுக்கு செல்லலாம் என சமூக தீர்வு காணப்பட்டது.
இதற்கிடையே கடந்த 25-ம் தேதி ரங்கராஜா அந்த பகுதியில் உள்ள கேபிள் ஆபரேட்டர் அசோக்குமார் (43) என்பவருடைய வீட்டு வழியாக நடந்து சென்றார். அந்த சமயம் அவர்கள் ரெண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அசோக்குமார் தான் வைத்திருந்த கத்தியால் ரங்கராஜாவை குத்தினார். இதனை தடுத்த ரங்க ராஜாவின் இடது கையில் கத்தி குத்து விழுந்தது. தாக்குதலில் அசோக் குமாரும் லேசான காயமடைந்தார். ரங்கராஜா குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மணவாளக்குறிச்சி போலீசார் அசோக் குமார் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.