ஈரோடு, ஜூலை 22 –
தமிழ்நாடு அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை இணைந்து நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஆண்டு தோறும் சிறந்த இளம் அறிவியலாளர் ஒருவருக்கு மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் அறிவியல் விருது என்ற பெயரில் சிறப்பு விருது வழங்கப்படுகிறது. இவ்விருதிற்காக அளிக்கப்படும் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையை சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை வழங்குகிறது. விருதாளர் 40 வயதிற்கு உட்பட்ட இளம் அறிவியலாளராக விளங்குதல், பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆய்வுக்கூடங்களிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட வேறு ஆய்வுக்கூடங்களிலோ ஆய்வுகளை மேற்கொள்தல், பெயர் பெற்ற சர்வதேச அறிவியல் இதழ்களில் குறைந்த பட்சம் 10 ஆய்வுக் கட்டுரைகள் வெளி வந்திருத்தல் உள்ளிட்ட சில அடி ப்படைத் தகுதிகள் உள்ளவர்கள் தங்களது ஆய்வு விபரக் குறிப்புகளை அனுப்பலாம்.
எந்தக் கண்டு பிடிப்புக்கு ஆய்வாளர் விருதுக்குரியவராக விளங்குகிறார் என்பதை சுருக்கமாகவும் தெளிவாகவும் குறிப்பிடுதல் அவசியம். ஆய்வுக் குறிப்புகளையும் ஆய்வு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் 25-ந் தேதிக்குள் info @makkal sinthanai peravai. org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பலரின் வேண்டுகோளுக்கு இணங்க குறிப்புகள் அனுப்பப்படுவதற்கான கடைசி தேதி கால நீட்டிப்பு செய்யப்பட்டு தற்போது இவ்வாறு அறிவிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 5-ந் தேதி (செவ்வாய் கிழமை) மாலை 6 மணிக்கு ஈரோடு புத்தகத் திருவிழா மாலை நேர சிந்தனை அரங்க நிகழ்வில் இவ்விருது வழங்கப்பட உள்ளது. விஐடி பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் ஜி. விஸ்வநாதன் இவ்விருதை வழங்கி விழாச் சிறப்புரை ஆற்றவுள்ளார்.