கிருஷ்ணகிரி, ஜூலை 3 –
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சாமண்டப்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ மகாகணபதி மற்றும் ஸ்ரீ மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா மிக விமரிசையாக நடைபெற்றது.இந்த விழாவை முன்னிட்டு, கடந்த சில நாட்களாக கணபதி பூஜை, யாகசாலை பூஜைகள் மற்றும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
முன்னதாக, யாகசாலையில் வைத்து பிரத்தியேகமாக பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை, ஆச்சாரியார்கள் தலையில் சுமந்தவாறு கோயிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.அதனைத் தொடர்ந்து, கோபுரக் கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை முறைப்படி நடத்தி வைத்தனர்.
பின்னர், கலசத்தில் இருந்த புனித நீரை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் மீது தெளித்தனர். அப்போது அங்கிருந்த பக்தர்கள் “ஓம் சக்தி, பராசக்தி” என பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.இந்த மகா கும்பாபிஷேக விழாவில் சாமண்டப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.
விழாவின் நிறைவாக, வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சாமண்டப்பட்டி கிராம ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.



