நாகர்கோவில், ஜூலை 29 –
தூர் வாரும்போது சேதம் அடைந்த சானல் கரை பக்கச்சுவர் மற்றும் மட்கா குப்பைகளை பொது வழியில் எரிக்கும் பேரூராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அன்சி சோபா தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பேரூராட்சிக்குட்பட்ட நாவூட்டி விளை அருகில் முகமாத்தூர் தொட்டி பாலம் தொடங்கும் இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் ஒப்பந்ததாரர் தூர் வாரும் போது கரை உடைந்து தண்ணீர் திறந்து விட முடியாத படி சேதம் அடைந்துள்ளது.
நீண்ட நாட்களாகியும் யாரும் சரி செய்யவில்லை. எனவே தக்க நடவடிக்கை எடுத்து உடைப்பை சரி செய்து தருமாறும் மேலும் தூர் வாரிய மண்ணை கால்வாய் கரையில் வைத்துள்ளதால் மழை பெய்யும் போது மீண்டும் சிறிது சிறிதாக தூர் வாரிய மண் கால்வாயில் உள்ளே செல்கிறது. அதனையும் தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முளகுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட மாத்தூர் தொட்டி பாலம் மற்றும் பட்டணங்கால் கிளை கால்வாய், நாவூட்டி விளை ஆகிய இடங்களில் பொதுமக்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் குப்பைகளை கொட்டி எரிப்பதால் நீர் நிலைகள் மாசுபடுவதுடன் அதிக வெப்பத்தால் தொட்டி பாலத்தில் விரிசல் விழும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் அருகில் இருக்கும் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கும் நச்சுப் புகையால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே தகுந்த நடவடிக்கை எடுத்து சுற்றுப்புற சூழல் மாசடைவதை தடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.