நாகர்கோவில், ஜூன் 14 –
இந்தியா போஸ்ட் பேமன்ட்ஸ் பேங்க் “Protect 360” பொது காப்பீட்டு இயக்கத்தை கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி செயல்படுத்தி வருவதாகவும், இதில் இணைந்து அனைவரும் காப்புரிமை பெற்று பயனடைய கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கா.செந்தில்குமார் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிருப்பதாவது:- இந்தியா போஸ்ட் பேமன்ட்ஸ் பேங்க், கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களிடையே காப்பீட்டு விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில், “Protect 360” என்ற புதிய பொது காப்பீட்டு இயக்கத்தை 10.06.2025 முதல் 30.06.2025 வரை செயல்படுத்துகிறது. இந்த இயக்கத்தின் முக்கியக் குறிக்கோள், எதிர்பாராத இழப்புகள் மற்றும் சேதங்களிலிருந்து மக்களை நிதிபூர்வமாக பாதுகாப்பதில் பொது காப்பீட்டின் அவசியத்தை வலியுறுத்துவதாகும். மக்கள் அனைவரும் எளிதில் அணுகக்கூடிய வகையில் கீழ்க்காணும் முக்கிய காப்பீட்டுத் திட்டங்கள் இந்த இயக்கத்தின் வாயிலாக அறிமுகப்படுத்தப்படுகின்றன.GAG (Group Accident Guard), மோட்டார் வாகனக் காப்பீடு, சுகாதாரக் காப்பீடு, டாப்-அப் காப்பீட்டுத் திட்டங்கள் போன்றவைகள்
“பொது காப்பீடு என்பது தனிநபர்களுக்கும் வணிகங்களுக்கும் நம்பிக்கையூட்டும் பாதுகாப்பு கருவியாகும். இயற்கைப் பேரழிவுகள் முதல் சாலை விபத்துகள் வரை நேரத்தில் வழங்கப்படும் காப்பீடு வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவுகிறது. ‘Protect 360’ இயக்கம் இந்த பாதுகாப்பை எளிதாகவும், விரைவாகவும் மக்கள் வீடுகளுக்கு அருகிலேயே கொண்டு செல்லும் ஒரு முக்கிய முன்னெடுப்பாகும்.” இத்திட்டம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்கள் வழியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. குறிப்பாக காப்பீடு இல்லாத மற்றும் காப்பீட்டு சேவைகள் குறைவாக உள்ள சமூகங்களை முக்கியமாகக் குறிவைத்து இந்த இயக்கம் காப்பீட்டு இடைவெளியைக் குறைத்து கீழ்மட்ட மக்களுக்கும் நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் செயல்படுகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது .



