ஈரோடு, ஜூலை 4 –
ஈரோடு மாவட்டம் பெருந்துறை, கோபிச்செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.20.42 கோடி மதிப்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கோபி பொம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், கோப்புகள், செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்ட பணிகள், பணியாளர்கள் விபரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு தோட்டக்காட்டூரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.10 இலட்சம் வீதம் ரூ.27.90 இலட்சம் மதிப்பீட்டில் 9 வீடுகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு வீடுகளை உரிய காலத்திற்குள் கட்டி பயனாளிகளுக்கு வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, கடுக்காம்பாளையம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.31.40 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், கோபிச்செட்டிபாளையம் நகராட்சியில் செயல்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் பராமரிக்கப்படும் அரசு போட்டித்தேர்வுகளுக்கான நூல்கள், பிற நூல்கள், தினசரி வருகை தரும் வாசகர்கள் மற்றும் அரசு தேர்வுகளுக்கு பயில்பவர்கள் விபரம், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அரசு போட்டித்தேர்விற்கு பயிலும் இளைஞர்களிடம் தேர்விற்கு பயிலும் முறை, நேர மேலாண்மை, தொடர்ந்து தேர்வுகள் எழுதி பயிற்சி மேற்கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசின் சார்பில் தேர்விற்கு பயிற்சிகள் அளிப்பது குறித்து எடுத்துரைத்தார்.
லக்கம்பட்டி பேரூராட்சி செங்கலரையில் அம்ரூத் 2.0 குடிநீர் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ரூ.19.83 கோடி மதிப்பீட்டில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், சீனாபுரம் ஊராட்சி, ஆயிக்கவுண்டன்பாளையம் ஊர்ப்புற நூலகத்தில் உள்ள நூல்கள் விபரம், தினசரி வருகை தரும் வாசகர்கள் விபரம், பணியாளர்கள் விபரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.