சுசீந்திரம், அக். 7 –
புத்தளம் அருகே தெற்குதேரிவிளையில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வெள்ளி, செவ்வாய் மற்றும் பௌர்ணமி கிழமையில் பூஜை நடத்துவது வழக்கம். இந்தக் கோவிலில் நேற்று முன்தினம் (5-ம் தேதி) இரவு 10:30 மணியளவில் கோவில் கதவு பூட்டப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு பூஜாரி சுயம்புலிங்கம் பௌர்ணமி பூஜைக்காக சென்று பார்த்தபோது கோவிலின் மூலஸ்தான கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உடனே அதிர்ச்சி அடைந்த பூஜாரி சுயம்புலிங்கம் இதுகுறித்து ஊர் தலைவர் ஆதித்தனக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் ஊர் தலைவர் ஆதித்தன் கோவிலை வந்து பார்த்துவிட்டு இதுகுறித்து சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த பொழுது கோவிலில் முத்தாரம்மன் சாமியின் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்கச் செயின் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளையும் பதிவு செய்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளையும் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முத்தாரம்மன் கோவிலில் சாமி கழுத்தில் கிடந்த தங்க செயின் திருட்டுபோய் இருப்பது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


