புதுக்கோட்டை, ஆகஸ்ட் 07 –
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் பணிபுரியும் வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆகியோருக்கு திறன் இயக்கம் சார்ந்த விளக்கக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு முதன்மைக்கல்வி அலுவலர் கூ. சண்முகம் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது: அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 9- ம் வகுப்பு வரை பயிலும் கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் கற்றல் திறனை 6 மாதங்களுக்குள் மேம்படுத்த அரசால் அறிவித்துள்ள உன்னதமான திட்டம் திறன் இயக்கம் திட்டமாகும்.
இத்திட்டத்தின் செயல்பாடுகள் பள்ளிகளில் நடைமுறைப்படுத்துவதை வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆகியோர் வாரந்தோறும் குறைந்தது 3 பள்ளிகள் வீதம் 2 வாரங்களுக்கு குறைந்தது 6 பள்ளிகளில் திறன் இயக்கம் சார்ந்த வகுப்பறை உற்று நோக்கலை செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒருமுறை இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள உங்கள் அனைவருக்கும் வெள்ளிக்கிழமை காலையில் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தினை சேர்ந்தவர்களுக்கும், மதியம் அறந்தாங்கி கல்வி மாவட்டத்திற்கும் மீளாய்வு கூட்டம் நடத்தப்படும். அக்கூட்டத்திற்கு 2 வாரங்களில் திறன் இயக்கம் சார்ந்து பள்ளிகளில் வகுப்பறைகளில் உற்றுநோக்கப்பட்ட புள்ளி விபரங்களுடன் கலந்துகொள்ள கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் (இடைநிலை) முனைவர் ஜெ. ஆரோக்கிய ராஜ், அறந்தாங்கி சொ. மாயக்கிருஷ்ணன், மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) செந்தில், அறந்தாங்கி கலாராணி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவித்திட்ட அலுவலர் செந்தில், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர்கள் கி. வேலுச்சாமி, இளையராஜா, திறன் இயக்கம் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பரிசுத்தம், வட்டாரக்கல்வி அலுவலர்கள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.