புதுக்கடை, மே 7 –
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு அதிக அளவில் கனிம வளங்கள் கடத்தப்பட்டு வந்தது. இந்த கனிம வள லாரிகளால் சாலைகள் அனைத்தும் சேதமடைந்ததுடன், ஏராளம் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு போன்றவை நடைபெற்று பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் தேர்தல் நேரத்தில் தக்கலை பகுதியில் வைத்து கல்லூரி மாணவி ஒருவரை அவரது தந்தை பைக்கில் கொண்டு செல்லும்போது, கனிமவள லாரி மோதி மாணவி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். உயிரிழந்த விவகாரத்தில் இரவில் தக்கலையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது.
இதை அடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் எஸ்பி ஆகியோரின் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லும் அனைத்து வாகனங்களும் தடை செய்யப்பட்டன. தடையை மீறும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வழியாக மீண்டும் கனிம வள லாரிகளில் கனிம வளங்கள் கடத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
இன்று புதுக்கடை பகுதி 4 வழிச்சாலையில் நடந்த வாகன சோதனையில் தடையை மீறி கேரளாவுக்கு செல்ல முயன்ற 7 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி அளித்த புகாரின் பேரில் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் காளியக்கவிளை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையில் 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகன சோதனையானது மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் தடையை மீறும் கனரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



