புதுக்கடை, மே 16 –
கொட்டில்பாடு பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் சோனியா (35). இவரது உறவினர்களான பிரிஜிட் என்ற பாபி (45), பெனடிக்ட் என்ற அம்பாடி (50), ரெஜென்சி பானு (22) ஆகியோர் புதுக்கடை அருகே இனயத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் ரெஜென்சி பானுவை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதற்காக கடந்த 2024ம் ஆண்டு ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 500 வங்கிக் கணக்கிலும், 28 ஆயிரத்து 500 ஜி பே நம்பரிலும் மற்றும் மூன்றரை பவுன் தங்க நகைகளையும் வாங்கியுள்ளனர்.
அதன் பின்னர் ரெஜென்சி பானு வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் ஜோஸ் சோனியாவுக்கு கொடுக்க வேண்டிய பணத்தையும் நகைகளையும் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதனால் அவர் இனயத்தில் உள்ள அவர்கள் வீட்டில் சென்று பணத்தை கேட்டுள்ளார். அப்போது கெட்ட வார்த்தைகள் பேசி அவரையும் அவரது தங்கையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
உடனடியாக தகவல் அறிந்து ஜோஸ் சோனியாவின் தந்தையும் தம்பியும் வந்து தட்டி கேட்டுள்ளனர். அவர்களையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் குழித்துறை அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். இது குறித்து புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நீதிமன்ற உத்தரவின்படி புதுக்கடை போலீசார் தற்போது பணம் நகைகள் போன்றவற்றை வாங்கி ஏமாற்றிய பிரஜித் என்ற பாபி, பெனடிக்ட் என்ற அம்பாடி, ரெஜென்சி பானு ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


