ஈரோடு, ஜூன் 30 –
ஈரோடு மாநகராட்சி பகுதியில் உயர்த்தப்பட்ட சொத்து வரியினை குறைக்கும் தீர்மானத்தை அமல்படுத்தக் கோரி பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட தலைவர் செந்தில் தலைமை தாங்கினார்.இதில் சி. சரஸ்வதி எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சியால் உயர்த்தப்பட்ட சொத்து வரியினை குறைப்பதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கடந்த மூன்று மாதங்களாக நிறைவேற்றாமல் ஏமாற்றி வரும் மாநகராட்சியினை கண்டித்து இந்த போராட்டம் நடக்கிறது. இனியாவது ஈரோடு மாநகராட்சியில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி சொத்து வரியை உடனே குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிச்சாமி முன்னாள் மாவட்ட தலைவர் எஸ்.டி. செந்தில்குமார், மாவட்டத் துணைத் தலைவர் குணசேகரன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் சரவணன், புனிதம், ஐயப்பன், மாவட்ட பொருளாளர் சுதர்சன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய, மாநில, மாவட்ட, மண்டல மற்றும் அணி பிரிவு நிர்வாகிகள் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர். இவர்களில் 100 பேர்களை போலீசார் கைது செய்து பிறகு மாலையில் விடுதலை செய்தனர்.