தருமபுரி, ஜூலை 19 –
தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தொடர் மறியல் போராட்டம் நடைபெற்றது.
தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டின் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு ஊதியக் குழுக்களில் இழைக்கப்பட்ட அநீதி களையப்பட்டு ஊதிய முரண்பாடுகளை நீக்கி மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் 01.01.2006 முதல் மீண்டும் வழங்கிடவேண்டும். தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களின், குறிப்பாகப் பெண்ணாசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பினைப் பறிக்கும் வகையிலும் ஊட்டுப்பதவிகளில் மாற்றம் செய்து ஒரு லட்சம் தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வைப் பாதிக்கும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 243ஐ முற்றிலும் ரத்து செய்திட வேண்டும்.
தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தவாறு தமிழ்நாடு அரசு பேரறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சிக் காலத்திலிருந்து வழங்கிய 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை ஆசிரியர்களுக்கு உடனடியாக மீண்டும் வழங்க வேண்டும். ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறத் தகுதித் தேர்வு தேவையில்லை என்பதைத் தமிழ்நாடு அரசு கொள்கை முடிவாக அறிவித்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தகுதித் தேர்வு தொடர்பான வழக்கை விரைந்து முடிவுக்குக் கொண்டு வந்து காலியாக உள்ள 6,000க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பதவி உயர்வுப் பணியிடங்களை தமிழ்நாட்டின் கல்வி நலன் கருதி உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் மாணவர்களின் கல்வி நலன் கருதி உடனடியாக நிரப்பிட வேண்டும்.
அரசாணை எண்: 23 நாள்: 12.01.2011ன் படி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலைக்கு தர ஊதியம் ரூ.5,400 பெற்றவர்களுக்கு தேர்வுநிலை பெற்ற பின்பு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் ஆகிய பதவி உயர்வுகளைப் பெற்றதற்காக தவறான தணிக்கைத் தடைகளை விதித்து இலட்சக்கணக்கில் பணத்தை திரும்பச் செலுத்த உத்தரவிட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஓய்வூதியப் பணப் பலன்களைப் பெற இயலாமல் பெருந்துன்பத்தில் உள்ளனர். எனவே முற்றிலும் தவறான இத்தணிக்கைத் தடையை நீக்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களுக்கு காலமுறை வாதியம் வழங்கிட வேண்டும்.
மறியல் போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கோ. காமராஜ், எஸ். அருள்சுந்திரம் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் சாமிநாதன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சென்னகேசவன், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் பழனியப்பன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் அருள், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி சிவக்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.