நாகர்கோவில், டிச. 15 –
பள்ளி மாணவ – மாணவியர்களின் கல்வி வளர்ச்சியில் அரசும், கல்வித்துறையும் மெத்தனம் காட்டி வருவது வருத்தமளிக்கிறது என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முத்துக்குமார் கூறியதாவது: திருநெல்வேலி பாளையங்கோட்டையில், 9- ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியர்கள் வகுப்பறையிலேயே மது போதையை பயன் படுத்தியுள்ளார்கள். இது வெட்கக்கேடான சம்பவம். பெண்கள் மட்டுமே படிக்கும் இப்பள்ளியில், மாணவியர்களின் கையில் எப்படி மது பாட்டில் வந்தது? துணையாக நின்றவர் யார்? என்பது பற்றி ஆராய வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்த மட்டில் பள்ளி படிப்பு பலருக்கும் எட்டாக் கனியாகவே இருந்துக் கொண்டிருக்கிறது. போதை பொருள் மட்டுமல்லாமல் சமுக பாகுபாட்டாலும் மாணவர்களின் கல்வி தரம் குறைந்துக் கொண்டிருக்கின்றது. நாங்குநேரி பள்ளி மாணவர் வீடு புகுந்து அரிவாளால் சக மாணவர்களால் தாக்கப் பட்ட சம்பவம் தமிழகத்தையே அச்சுறுத்தியது. அதன் பிறகும் இது போன்ற சம்பவங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் கதையாக நடந்துக் கொண்டிருப்பது தான் நிதர்சனமான உண்மை.
சில மாதங்களுக்கு முன்பு கூட பாளையங்கோட்டை பள்ளி ஒன்றில் 8 ஆம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே தனது புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சக மாணவனை வெட்டியுள்ளான். தடுக்க சென்ற ஆசிரியைக்கும் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.
ஏர்வாடி பள்ளி ஒன்றில் 8- ஆம் வகுப்பு 9- ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் அரிவாள் வெட்டு நடந்தேறியுள்ளது. இது போன்று திருநெல்வேலியில் உள்ள ஒரு பள்ளியிலும் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தகராறு செய்துள்ளனர். மேலும் வள்ளியூர், மூன்றடைப்பு பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் மாணவர்களிடையே சமுக ரீதியான மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் இது போன்ற சமூக ரீதியான மோதல்களும், போதை பொருட்கள் பயன்படுத்துவதும் பள்ளி மாணவர், மாணவியர்கள் மத்தியில் அத்து மீறி போய்க் கொண்டிருக்கின்றன. இதை கட்டுப்படுத்த வேண்டியது அரசின் தலையாய கடமை. இந்த விஷயத்தில் அரசு மெத்தனமாக இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.
பள்ளி மாணவர்களுக்கு அரசின் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு வகுப்பு நடத்தப் பட வேண்டும். அதே வேளையில் மாவட்டந்தோறும் பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழுவின் சார்பில் மாணவ – மாணவியர்களுக்கு மாதந்தோறும் கவுன்சிலிங் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.



