தேனி, செப். 25 –
தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு (SLAS – 2025) ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரைப்படி, தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கான அடைவுத்தேர்வு ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை, வகைப்பாடு, கட்டமைப்பு தேவைப்படும் பள்ளிகள், ஆசிரியர்கள் காலியிடம் , கல்வி இடைநிற்றல் ஆகியன குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் தேனி மாவட்டத்தில், கடந்த கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பில் தமிழ் மற்றும் கணிதத்தில் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருக்கும். 12 ஆம் வகுப்பில் 93.43% தேர்ச்சி விகிதம் பெறப்பட்டுள்ளது. எனவே, அனைத்து பாடங்களிலும் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் தேர்ச்சி விகிதத்தினை அதிகரிக்கலாம்.
இனிவரும் காலங்களில் கல்வியின் தரம் என்பது அளவீடாக (Quantity) இல்லாமல் தரத்தின் (Quality) அடிப்படையில் அளவீடு செய்யப்படும். ஸ்லாஷ் ரிப்போர்ட்டில் (SLAS) தேனி மாவட்டம் மாநில அளவில் 7-ஆவது இடத்தை பெற்றமைக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். தேனி மாவட்டத்தில் சிறந்த செயல்திறனில் தேனி, ஆண்டிபட்டி, மயிலாடும்பாறை ஆகிய வட்டாரத்தை சேர்ந்த பள்ளிகள் முதன்மை வகிக்கிறது. சராசரி நிலையில் உள்ள உத்தமபாளையம், கம்பம், போடிநாயக்கனூர், பெரியகுளம் வட்டாரத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டிய சின்னமனூர் வட்டார பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
3 ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை தேனி மாவட்டம் மாநில சராசரியை விட மாவட்ட அளவில் முன்னிலையில் உள்ளது. ஆனால் 8 –ஆம் வகுப்பில் 2 பாடங்களில் பின்தங்கி உள்ளது. எனவே, தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும்.
குறிப்பாக மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்களில் மிகுந்த புலமை மிக்கவர்களாக திகழ வேண்டும். ஒருவன் கற்ற கல்வி ஏழுதலைமுறைக்கும் உதவும் என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் பள்ளிக்கல்வித் துறை செயலாற்றி வருகிறது.
ஆசிரியர்கள் அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார்கள். ஒரு வருடத்தின் உழைப்பினை அந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்படும் ஸ்லாஷ் ரிப்போர்ட்டின் (SLAS) மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மாணவர்களை கல்வியில் முழுவதுமாக தயார்படுத்தினாலும் அவர்களின் குடும்ப சூழ்நிலை அவர்களிடம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதால் மீண்டும் முதலிலிருந்தே தொடங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொள்ள ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை தொடர்ச்சியாக வழங்க வேண்டும்.
கல்வியில் ஒரு மாவட்டம் முதலிடம் பெற்றால் பிற மாவட்டங்கள் அடுத்த இடங்களையே பெற முடியும். இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுவரை பாடத்திட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டது. ஆனால் தற்பொழுது கற்றல் விளைவுகளில் (Learning output) மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.
மாணவர்கள் எந்த சூழ்நிலையிலிருந்து பள்ளிக்கு வருகிறார்கள் என்றும், அவர்களை சிறந்த முறையில் தயார்படுத்துவது குறித்து ஆசிரியர்களுக்கே மட்டுமே நன்றாக தெரியும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மாணவர்கள் பள்ளிக்கு தொடர்ச்சியாக வர வேண்டும் என்பதற்காக காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்கள். மேலும், மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி சேர்க்கை உறுதி செய்யப்படுவது வரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தின் முக்கிய நோக்கம் 3, 5, 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம், புரிதல் தன்மையின் தரத்தை மதிப்பீடு செய்வதே ஆகும். தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அவர்களின் கல்வி திறனை கண்டு கொள்ளாமல் இருத்தல் கூடாது. 3-ஆம் வகுப்பு முடித்து 4 ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களின் கற்றல் திறன் போதிய அளவிற்கு உள்ளதா என உறுதிசெய்யப்பட வேண்டும். Low ordered thinking (remembering of the words), Middle Ordered thinking (Understanding the words), High Ordered thinking (Creativity, Assessment, Evaluation, Examining) என்ற நிலையில் குழந்தைகளுக்கு கற்றல் திறன் அமைதல் வேண்டும். இதற்கு முன்பாக IIT, NIT உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை மிக குறைவாக இருந்துள்ளத நிலையில், கடந்த நான்காண்டுகளில் மத்திய கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டம் ஸ்லாஷ் ரிப்போர்ட்டில் (SLAS) 7-ஆவது இடத்திலிருந்து முதல் 5 இடத்திற்குள் வருவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் குழுவாக கலந்தாலோசனை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக மாணவர்களிடம் வாசிப்பு இயக்கத்தினை மேம்படுத்த வேண்டும். வாசிப்பு இயக்கம் சார்ந்து சிறு புத்தகங்கள் மூலம் குழந்தைகளை வாசிக்க வைத்தல். மாணவர்களிடம் கேள்வி கேட்டும் திறனை வளர்த்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் கற்றல் திறனை அதிகரித்தல் வேண்டும்.
மாணவர்கள் முழுமையான புரிதலோடு பள்ளிப்படிப்பை நிறைவு செய்தால் மட்டுமே, உயர்கல்வியை முறையாக கற்க முடியும். கொரோனா காலத்தில் மாணவர்களின் கற்றல் இடைவெளியினை பூர்த்தி செய்வதற்காக இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை செயல்படுத்திய ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே. அதனைத் தொடர்ந்து 3 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பாடங்களை எளிதாக புரிந்து கொள்வதற்காக எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. தற்பொழுது, மணற்கேணி செயலி மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலும், தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஏற்ப பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள், ஆய்வகங்கள், கூடுதல் வகுப்பறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தமிழ்நாடு அரசின் சார்பில் செய்துதரப்படுகிறது.
அரசுப் பள்ளி மாணவர்களிடையே உள்ள கற்றல் இடைவெளிகளைக் குறைத்து, ஆங்கிலம், தமிழ் மற்றும் கணிதப் பாடங்களில் அவர்களின் தேர்ச்சியை மேம்படுத்தவும், கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்களுக்காகவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் திறன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனை சிறப்பான முறையில் ஆசிரியர்கள் கையாண்டு, மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த வேண்டும்.
பொள்ளாச்சியில் பார்வை இழந்த ஆசிரியர் ஒருவர் புதுமையான சிந்தனைகளுடன் பாடம் கற்பித்து அதனை வீடியோவாக ஒளிப்பதிவு செய்து யூடிப்பில் பதிவேற்றம் செய்துள்ளார். இது பிற மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கு உதவும்.
ஒரே மாதிரியாக பாடம் நடத்தாமல் புதுமையான அணுகுமுறைகளை கையாள்வதன் மூலம் மாணவர்களின் புரிதல் திறன்களை மேம்படுத்த வேண்டும். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கணித சூத்திரங்களை (Formula) பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் மாணவர்களில் பார்வைக்கு காட்சிப்படுத்தி உள்ளார். இதுபோன்று புதுமையான நடவடிக்கைகளை தெரிவிப்பதன் மூலம் புதிய சிந்தனைகளை மாணவர்களிடம் உருவாக்க உதவியாக இருக்கும்.
தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்களின் பார்வை 360 டிகிரியில் இருக்க வேண்டும். அடுத்து நடைபெற உள்ள பொதுத்தேர்வில் மாணவர்களை 100% தேர்ச்சி அடைய செய்து ஆசிரியர்களும் வெற்றி பெற்று பிற மாவட்டங்களுக்கு தேனி மாவட்டம் முன்னுதாரணமாக உருவாக வேண்டும் என மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக இக்கூட்டத்திற்கு வருகை தந்த மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை சட்டமன்ற உறுப்பினர்கள் என். இராமகிருஷ்ணன் அவர்கள் (கம்பம்), ஆ. மகாராஜன் அவர்கள் (ஆண்டிபட்டி), கே.எஸ். சரவணக்குமார் (பெரியகுளம்), தேனி-அல்லிநகரம் நகர்மன்றத் தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், திட்டக்குழு உறுப்பினர் நாராயண பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு வரவேற்றனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: நானும் அரசு பள்ளி மற்றும் அரசு கல்லூரியில் படித்துதான் இந்நிலையை அடைந்துள்ளேன். மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்போது அருகேயுள்ள பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் மாணவர்களிடம் கலந்துரையாடுவதன் மூலம் அவர்களின் தேவைகளை தெரிந்து கொண்டு அதற்கான தீர்வை காண முடியும்.
மேலும், ஒருவர் கல்வி கற்பதால்தான் ஒரு சமூகத்தை அறிவார்ந்த சமூகமாக உருவாக்க முடியும். குறிப்பிட்ட சில மாணவர்களின் படிப்பு செலவிற்காக CSR நிதியிலிருந்து மாணவர்களின் கல்வியை தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்வியோடு இல்லாமல் விளையாட்டு, கலை நிகழ்ச்சிகளில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தற்பொழுது கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மேலும், ஆசிரியர்கள் நல்ல மனநிலையில் இருந்தால்தான் மாணவர்களிடம் நல்ல சிந்தனைகளை வளர்த்து சாதனையாளர்களாக உருவாக்க முடியும். எனவே ஆசிரியர்கள் ஆரோக்கியமான மனநிலையில் தங்கள் ஆசிரியர் பணியை செய்வதன் மூலம் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, உயர்கல்வி படிப்பதற்கு கல்வி உதவித்தொகையாக சமூக பங்களிப்பு நிதியிலிருந்து (CSR) தலா ரூ.10,000/- வீதம் 12 மாணவர்களுக்கு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஐ.மகாலட்சுமி, முதன்மை கல்வி அலுவலர் (பொ) உஷா, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் முனைவர் ராஜேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர்கள் சுருளிவேல் (இடைநிலை), சண்முகவேல் (மெட்ரிக்) மற்றும் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள், கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



