பரமக்குடி, ஜூலை 5 –
பரமக்குடி அருகே உள்ள போகலூர் ஒன்றியம் சேமனூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மருதாருடைய அய்யனார் ஸ்ரீ திரு மஞ்சுடைய அய்யனார் ஸ்ரீ ரெட்டச்சி அம்மன் கோயிலில் களியாட்டம் மற்றும் புரவி எடுப்பு விழா நடைபெற்றது. 21 ஆண்டுகளுக்கு பின்பு கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து உரத்தூர் கிராமத்தில் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த புரவிகளை மேள தாளங்கள் முழங்க பூஜைகள் செய்து 6 கிலோமீட்டர் தூரம் தோளில் சுமந்து சேமனூர் கிராமத்திற்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். அப்போது, இளைஞர்களும் பொதுமக்களும் ஆட்டம் பாட்டத்துடன் ஒயிலாட்டம் ஆடிவந்தனர். பின்னர் கோவில் முன்பு புரவிகளை வைத்து நெற்கதிர்களை பரப்பி மழை பெய்ய வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் சேமனூர் உள்பட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.