மார்த்தாண்டம், ஜூலை 17 –
களியல் பகுதியைச் சேர்ந்தவர் ஷீலா. இவர் பத்துகாணியில் இயங்கி வரும் அரசு உண்டு உறவிட மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவி ஆவார். இவருக்கு திருமணம் ஆகி கணவர் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். இந்த நிலையில் ஆசிரியர் பயிற்சி முடித்து வட்டப்பாறையில் உள்ள தொடக்கப்பள்ளியில் வேலை செய்து வந்த ஷீலா, தான் படித்த பத்துகாணி அரசு பள்ளியில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். அரசு பள்ளியில் முன்னாள் மாணவி தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற செய்தி அறிந்த உடன்படித்த நண்பர்கள், ஊர் மக்கள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் இவரது மகன்கள், சகோதர சகோதரிகளும் அதே அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.