நாகர்கோவில், ஜூலை 30 –
நாகர்கோவிலில் வீசிய சூறைக்காற்றில் வேப்பமூடு பகுதியில் மிகப்பெரிய அடையாளமாக இருந்த அரச மரம் முறிந்து விழுந்தது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவில் மாநகரின் அடையாளங்களில் ஒன்று வேப்பமூடு சந்திப்பாகும். இங்கு பழமையான அரசமரம் உள்ளது. கோடைகாலத்திலும் இந்தப் பகுதியில் குழுமை அதிகமாக இருக்கும். இந்த மரத்தின் நிழல் தாங்கலில் மாநகராட்சி சார்பில் முக்கோண பூங்கா அமைக்கப்பட்டு இருக்கை போடப்பட்டிருந்தன. மரத்தின் கீழ் காலை முதல் இரவு வரை முந்திரி வியாபாரிகள் அமர்ந்து வியாபாரம் செய்து வந்தனர்.
பஸ் நிறுத்தமும் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த அரச மரம் தான் மிகப்பெரிய பொக்கிஷமாக அந்தப் பகுதியில் இருந்தது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்று வேகமாக வீசி வருகிறது. நேற்று முன்தினம் வீசிய சூறைக்காற்றில் இரவு 10:30 மணியளவில் இந்த பழமையான அரச மரத்தின் மிகப்பெரிய கிளை முறிந்தது.
இந்த மரக்கிளை முறிந்து விழுந்ததில் அந்தப் பகுதியில் இருந்த 2 ட்ரான்ஸ்பார்மர், 4 மின்கம்பங்கள் உடைந்தன. மின் ஒயர்கள் அருந்ததால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் மாநகராட்சி பணியாளர்கள், மின்வாரிய பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மரம் முறிந்து விழுந்த சமயத்தில் மரத்தின் கீழ் பகுதியில் யாரும் இல்லை. இதனால் எந்த சேதம் ஏற்படவில்லை. இரவில் சம்பவம் நடந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பகல் நேரத்தில் நடந்திருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கும்.
இன்று அதிகாலை 5 மணியிலிருந்து மரத்தை வெட்டி அகற்றும் பணி தொடங்கின. கிரேன் கொண்டு வரப்பட்டு முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணி நடந்தது. தொழிலாளர்கள் துண்டு துண்டாக மரத்தை வெட்டும் பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. நேரம் செல்ல செல்ல ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்தனர். மரம் முறிந்து விழுந்ததை பார்த்து அவர்கள் கவலை அடைந்தனர். பல ஆண்டுகளாக மரத்தின் கீழ் அமர்ந்து முந்திரி வியாபாரம் செய்யும் பெண் தொழிலாளர்கள் மரம் முறிந்து விழுந்ததை பார்த்து கவலையுடன் நின்றனர். மரம் முறிந்து விழுந்த பகுதியில் இருந்த வாடகை கார் நிறுத்தம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தான் மாற்றப்பட்டது. அங்கிருந்த டிரைவர்கள் கூறுகையில், மிகப்பெரிய அடையாளத்தை வேப்பமூடு இழந்துள்ளது என்றனர்.
தற்போது பாதி முறிந்து விழுந்த நிலையில் மரம் உள்ளது தொடர்ந்து மரம் ஆபத்தான நிலையில் இருப்பதால் முழுமையாக மரத்தை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மரம் முறிந்து விழுந்த பகுதியில் பொதுமக்கள் யாரும் நேற்று அனுமதிக்கப்படவில்லை. முக்கோண பூங்காவில் இருந்து இருக்கைகள் அனைத்தும் சேதம் அடைந்தன. ட்ரான்ஸ்பார்மர் மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் அதை அப்புறப்படுத்தும் பணி நடந்தது.