தஞ்சாவூர், அக்டோபர் 24 –
டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நெல் கொள்முதல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூடிய புகார்கள் பொய்யானவை என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். தஞ்சாவூரில் இருந்து சரக்கு ரயிலில் அரவைக்கு அனுப்புவதற்காக நெல் மூட்டைகள் ஏற்றப்படுவதை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது: கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இதுவரை 1825 நெல் கொள் முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு எடுத்த முயற்சியால் வரலாற்றில் இல்லாத அளவுக்கு குறுவை சாகுபடி காலத்தில் 50 நாட்களில் 10 லட்சம் டன் மேல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 8 லட்சம் டன் மேல் மூட்டைகள் கிடங்குகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மீதமுள்ள 1.93 இலட்சம் டன்னில் மூட்டைகளை கிடங்களுக்கு கொண்டு செல்லும் பணி 10 நாட்களுக்குள் முடிக்கப்படும்.
தஞ்சாவூர் திருவாரூர் நாகை மயிலாடுதுறை இன்னும் 2 லட்சம் டன் நெல் மூட்டைகள் சேமித்து வைக்கும் அளவிற்கு இட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே புதிதாக நெல் கொள்முதல் செய்யப் படும் நெல் மூட்டைகளை வைப்பதற்கு இடமில்லை என எதிர்க்கட்சித்தலைவர் கூறுவது தவறான குற்றச்சாட்டு.
நெல் கொள்முதல் நிலையங்களில் குறைவான அளவிலேயே கொள்முதல் செய்யப்படுவதாக உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டையும் எதிர்க்கட்சித்தலைவர் கூறியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு குறுவை பருவத்தில் 200 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. ஆனால் நிகராண்டு 300 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம் தென்னமநாடு, ஒக்கநாடு கிழையூர் கொள்முதல் நிலையங்களில் ஒரு நாளைக்கு 3000 நெல் மூட்டைகளும் ஒரத்தநாடு புதூர் திருவையாறு விளாங்குடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு நாளைக்கு 2000 நெல் மூட்டைகளும் கொள் முதல் செய்யப்படுகிறது. ஆனால் 800 மூட்டைகள் மட்டும் கொள்முதல் செய்யப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் தவறான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இதே போல நெல்லை எடுத்துச் செல்ல போதிய லாரிகள் இல்லை எனக் கூறியிருக்கிறார். ஆனால் 20,000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்ட நிலையத்தில் 16,000 மூட்டைகள் லாரிகள் மூலம் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்றார்.
ஆய்வின்போது அமைச்சர்கள் அர.சக்கரபாணி (உணவு), டி ஆர் பி ராஜா (தொழில்) கோவி. செழியன் (உயர் கல்வி) மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், முரசொலி எம்பி, எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன் அன்பழகன், டி.கே.ஜி. நீலமேகம், அண்ணாதுரை, அசோக்குமார், மேயர் சண் ராமநாதன், நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் செல்வம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.



