நாகர்கோவில், ஜூலை 25 –
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பேரூராட்சிக்கு உட்பட்ட சரல் விளை பகுதியில் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நத்தம் புறம்போக்கு நிலத்தில் போக்குவரத்துக்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித இடையூறும் இன்றி குடியிருந்து வருபவர்கள் அன்னகிளி, பத்திரகாளி, ராமசாமி, ராஜேந்திரன் உள்ளிட்ட நான்கு குடும்பங்கள் ஆகும். இவர்கள் இப்பகுதியில் குடிசை அமைத்து அரசிற்கு மின்கட்டணம், வீட்டு வரி, குடிநீர் வரி முறையாக செலுத்தி ரேசன் கார்டு, ஆதார் கார்டு போன்ற அரசின் ஆவணங்களை பெற்று வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களின் குடியிருப்பு பகுதியின் பின்புறம் சுமார் 4 ஏக்கர் தென்னந்தோப்பு அமைந்துள்ளது. இந்த தென்னந்தோப்பை நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஒருவர் விலைக்கு வாங்கி தென்னந்தோப்பை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்கு முயற்சி மேற்கொண்டு வருவதால் அவர்களின் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு முன்புறமுள்ள குடிசை வீடுகள் இடையூராக இருப்பதால் இந்த குடிசைகள் அமைந்திருக்கும் பகுதி வழியே தான் வழிப்பாதை அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி இந்த குடிசை வீடுகளை இடித்து அகற்ற நேற்று பேரூராட்சி செயல் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் இரணியல் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்வேல் குமார் தலைமையில் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு வீட்டில் குடியிருந்த நபர்களுக்கு எவ்வித முன் அறிவிப்பும் இன்றி மின் இணைப்பை துண்டித்து வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து அப்புறப்படுத்தி ஜேசிபி வாகனம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது. வீட்டில் குடியிருந்த மக்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் இந்த வீடுகளை இடிப்பதற்க்கு முன்பு இவர்கள் குடியிருப்பதற்க்கு மாற்று இடம் கொடுத்து விட்டு வீட்டை இடியுங்கள் என்று தடுத்து நிறுத்தினர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது. தகவலறிந்த காங்கிரஸ் மாநில வழக்கறிஞர் அணி பிரிவு பொருளாளர் ஜாண் சொளந்தர் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் மற்றும் குடியிறுப்பு வாசிகளுடன் சுமூக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒரு மாத கால அவகாசத்தில் அரசின் மூலம் இப்பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து தரும்படி கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் நான்கு மணி நேரப் போராடத்திற்கு பிறகு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இச்சம்பவம் அறிந்த வில்லுக்குறி பேரூர் காங் கமிட்டி தலைவர் பிரகாஷ் தாஸ், தக்கலை வட்டார காங் தலைவர் பிரேம் குமார் மற்றும் சிஐடியு கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர் சங்க உதவி செயலாளர் ரவிசந்திரன் மற்றும் வில்லுக்குறி பேரூராட்சி துணைத்தலைவர் ராமலிங்கம் உட்பட ஏராளமானோர் குடியிருப்பு வாசிகளுக்கு ஆதரவாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.